முத்துலட்சுமி வீரப்பன் முதல் ஆனி ராஜா வரை: விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பேசியது என்ன?

By எஸ். நீலவண்ணன்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நேற்று நடைபெற்றது.

இதில் முத்துலட்சுமி வீரப்பன், ஆனி ராஜா, சுதா எம்.பி, வரை, வாசுகி, டி.கே.எஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, திருமாவளவன் ஆகியோர் பேசியது:

முத்துலட்சுமி வீரப்பன்: “என் கணவர் காட்டில் இருந்தாலும் அவருக்கு குடி, புகைப்பழக்கம் இல்லை. நீங்கள் குடிப்பத்தை நிறுத்தினால் சாராய ஆலை தானாக மூடப்படும். நீங்கள் குடிப்பதால் உங்கள் குழந்தைகளும் குடிக்கிறார்கள். தமிழகத்தில் 2 சமூக மக்களான வன்னியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர்கள்தான் குடிக்கிறார்கள்.

மேலைநாடுகளில் மன பிரச்சினைக்காக குடிக்கிறார்கள். நம் சமூகத்துக்கு அப்படிப்பட்ட பிரச்சினை இல்லை. படிக்கும் மாணவர்களிடம் கஞ்சா உள்ளது. ஈழத்தில் இறந்த போராளிகள் இறக்கும் முன் தன் கையில் இருந்த துப்பாக்கியை உயிரோடு இருப்பர்களிடம் கொடுத்துவிட்டு இறந்தார்கள். நீங்கள் இறக்கும்முன் உங்கள் கையில் உள்ள மதுவை கொடுக்கப் போகிறீர்களா?” என்று அவர் பேசினார்.

சுதா, எம்.பி - காங்கிரஸ் கட்சி: “இந்திய மக்களின் நன்மைக்காக மது இல்லா இந்தியாவை கொண்டுவருவது காந்தியடிகளின் கனவு. அதை நனவாக்கும் வகையில் இம்மாநாட்டை நடத்திவரும் திருமாவளவனுக்கு வாழ்த்துக்கள். தந்தை பெரியாரின் மனைவி நாகம்மையும், தங்கை கண்ணம்மாளும்தான் காந்தியிடம் மதுவிலக்கைப் பற்றி பேசினார்கள். இந்தியாவில் எங்கும் மதுவிலக்கை அமல்படுத்தாத போது முதன்முதலில் அமல்படுத்தியவர் ராஜாஜி. காந்தி இரண்டு பெண்களின் யோசனையை கேட்டு மதுவிலக்குக்காக போராடினார். அதுபோல திருமாவளவன் பெண்களை அழைத்து மதுவிலக்கு மாநாடு நடத்துகிறார். மதுவை ஒழிக்க ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து போராடவேண்டும். நமக்கான பொது எதிரி பாஜகவை நாட்டிலிருந்து அகற்ற இணைந்து போராடுவோம்” என பேசினார்.

டி.கே.எஸ் இளங்கோவன் - திமுக: “இம்மாநாட்டிற்கு நானும் ஆர்.எஸ்.பாரதியும் பங்கேற்போம் என்று எங்கள் தலைவர் திருமாவளவனிடம் கூறினார். ஒருவனின் மரியாதை குலைப்பது மது உள்ளிட்ட போதை பொருட்கள். 1970 வரை மதுவிலக்கு இருந்தது. அதே நேரம் குடிப்பழக்கம் இருந்தது. அண்டைமாநிலங்களில் சென்று தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மது அருந்தினர். உயர்ந்த சமுதாயம் நம் சமுதாயம். செம்மொழிகளில் ஒன்று நம் தாய்மொழி. 53 பெண் கவிஞர்கள் இருந்தது நம் தமிழ் சமூகமாகும். அகில இந்திய அளவில் மதுவிலக்கை அமல்படுத்தினால்தான் மது உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க முடியும். இப்போது தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினால் மது அருந்த அண்டை மாநிலம் செல்வார்கள்” என பேசினார்.

ஆனி ராஜா - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: “மதுவிலக்கை அமல்படுத்த பல கட்சிகள் குரல் கொடுத்தாலும் இந்த நோக்கத்திற்காக விசிக மட்டும்தான் மாநில அளவில் மாநாடு நடத்துகிறது. மது மட்டுமல்லாது அனைத்து போதை பொருட்கள் இந்தியாவில் உள்ள ஊராட்சிகளில் வந்துள்ளது. இந்தியா முழுவதும் போதையால் பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என பேசினார்.

வாசுகி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: “பெண்கள் தலையாட்டி பொம்மைகள் அல்ல. நாங்கள் போராளிகள் என்று புறப்பட்டு வந்த பெண்களை காண்கிறேன். அடிமைப்படுத்தும் சித்தாந்ததை வைத்துக்கொள்ளுங்கள். விடுதலையோடு உள்ள எங்கள் சித்தாந்தத்தை நாங்கள் வைத்துள்ளோம் என்றே நான் மத்திய அரசுக்கு சொல்லிக்கொள்கிறோம். இந்திய அளவில் பல்வேறு போராட்டங்களில் பெண்களை முன்னிருத்தும் கட்சிகளின் சார்பாக பெருமிதத்தோடு இம்மாநாட்டை பார்க்கிறோம். கொள்ளை லாபம் தரும் போதையை அழிக்க வேண்டும். வன்முறையை போதைப்பழக்கம் தூண்டுகிறது. இங்கு வந்தவர்களில் பெரும்பாலும் இந்த போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

மதுவைதான் ஒழிக்கவேண்டும். அதை சாப்பிடும் மனிதர்களை அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன். கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் வந்த வருவாய் ரூ.46 ஆயிரம் கோடி என்பதை நினைவுப்படுத்துகிறேன். மது ஆலைகளுக்கு உற்பத்தி உச்சவரம்பை கொண்டுவரவேண்டும். கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு போராடினால் குடிப்பழகத்தில் உள்ள உணவு விலையேறிவிட்டது இதற்காக போராடுங்கள் என்கிறார்கள். நன்கொடை வாங்குவதில் அரசியல் கட்சிகள் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்” என பேசினார்.

ஆர்.எஸ்.பாரதி - அமைப்புச் செயலாளர், திமுக: “மற்ற கட்சிகளில் மகளிர் வந்துள்ளனர். ஆனால், திமுகவில் நானும் இளங்கோவனும் வந்துள்ளோம். கலைஞர் மதுவிலக்கை அமல்படுத்த மக்களிடம் எழுச்சி வேண்டும் என்று 1971-ம் ஆண்டு கூறினார். அந்த நோக்கத்தை நிறைவேற்ற திருமாவளவன் முன்னெடுத்துள்ளார். குடும்பக்கட்டுப்பாடு மிகப்பெரிய பாவம் என்று கருதப்பட்டது. முதலில் 3 குழந்தைகள், பின்னர் நாம் இருவர் நமக்கு இருவர் என்றும், பின்னர் நாம் இருவர் நாம் ஒருவர் என்று ஆனதால் தமிழகத்தில் மக்கள் தொகை குறைந்து 41 எம்பிக்களை மத்திய அரசு 39 ஆக குறைத்தது. மது ஒழிப்புக்காக மாநாடு நடத்த துணிச்சல் வேண்டும்” என பேசினார்.

திருமாவளவன் - தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி: “நான் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். கடந்த மக்களைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தீர்கள். இம்மாநாட்டின் சிறப்பே லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்ததுதான். மதுவிலக்கு என்பது நம் புத்தர் காலத்திலிருந்தே பேசப்பட்டு வருகிறது. ஞான வம்சத்தில் இருந்து வந்தவன். சாதி மத பெருமைகளை நான் பேசவில்லை. இதுவரை நாம் பயன்படுத்தாதவர்களை இப்போது மதுவை வேண்டாமென்று சொன்ன காந்தியையும், ராஜாஜியையும் கௌரவப்படுத்துகிறோம். முதலில் செப்டம்பர் 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று பாமகவின் தியாகிகள் தினம் என்பதால் எதிரும் புதிருமாக வரக்கூடாது என்பதால்தான் இந்நாள் தேர்வு செய்யப்பட்டது.

புத்தர் உலகம் முழுவதும் மதுவிலக்கை சொன்னார். இந்த எளியவன் தமிழகத்தில், இந்தியாவில் சொல்கிறேன். எந்த மதமும் மதுவை ஆதரிக்கவில்லை. அரபு நாடுகளில் மதுக்கடைகளை காணமுடியாது. திருவள்ளுவர் கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தை எழுதியுள்ளார். உலகம் போற்றும் மகான்கள் யாரும் மதுவை ஆதரிக்கவில்லை. இந்த அடிப்படையில்தான் மதுவை வேண்டாம் என்றோம். 2015-ம் ஆண்டு திருச்சியில் மதுவிலக்கு மாநாட்டை நடத்தி, துண்டறிக்கைகளை வெளியிட்டோம். மதம் மாறிய அம்பேத்கர் ஏற்றுக்கொண்ட மதுவை தொடமாட்டேன் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். உடனே தமிழகத்தில் திருமாவளவன் மது வேண்டாம் என்று சொன்னதாக அரைவேக்காடுகள் கூறுகிறார்கள். நான் இந்தியா முழுவதும் மதுவிலக்கு வேண்டும் என்கிறேன். மதுவுக்கு பெரியார், மார்க்ஸ் அடிமையாகி இருந்தால் அவர்கள் நமக்கு கிடைத்து இருப்பார்களா.

மதுவுக்கு அடிமையானால் மனித வளம் அழியும். இதில் அரசியல் பேச வேண்டாம் என்றேன். உடனே நான் அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தேன் என்றும், கூட்டணி மாறப் போகிறேன் என்று இம்மாநாட்டின் நோக்கத்தை சிதைத்து விட்டார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளது. காவிரி, இலங்கை பிரச்சினைக்காக நாம் இணைந்து பேசவில்லையா? அப்படி இதை பேசி இருக்க வேண்டும். இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 7-லிருந்து 8 நாட்கள் மட்டுமே மதுக்கடைகள் மூடப்படுகிறது. இப்போது போதை பொருட்களை சாப்பிட வேண்டாம். ஸ்டிக்கர் போல ஒட்டிக்கொள்ளலாம். இதை ஒழிக்க வேண்டும் அல்லவா? திமுகவிற்கு கொள்கை அடிப்படையில் மதுவை ஒழிக்க உடன்பாடு உள்ளது. ஆனால், அதில் நடைமுறை சிக்கல் உள்ளது.

அண்ணா, மதுவிலக்கை தளர்த்தவில்லை. மதுக்கடைகளை மூட சொல்லி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கை வைக்கிறோம். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கான இழப்பீடை மத்திய அரசு தர வேண்டும் என்று கலைஞர் கூறினார். பின்னர் 1974-ம் ஆண்டு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் மதுவிலக்கை தளர்த்தியது யார்? டாஸ்மாக்கை உருவாக்கியது யார்? இதை வாதாடுபவர்கள் என்ன சூழ்ச்சியில் பேசுகிறார்கள் என்பதை சொல்கிறேன்.

தமிழக முதல்வர் ஸ்டாலினா கடைகளை திறந்தார். வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அதற்கு முன் சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேர்தல் அரசியல் வேண்டாம் என்ற நிலையை கூட நான் எடுக்க தயாராக உள்ளேன். ஆளுநர் வருகையால் காந்தி மண்டபத்தில் என்னை அனுமதிக்கவில்லை. ஆனால், நான் காந்தியை அவமதித்துவிட்டதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை கூறுகிறார். மதசார்பின்மையை சொன்னதற்காக காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த மேடைக்கு வந்த தலைவர்களால் விசிகவின் நோக்கம் மேம்பட்டுள்ளது” என பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்