சென்னை: “தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? இல்லை மன்னராட்சியா? அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறையின் அத்துமீறிய கைதுக்கு எதிராகக் கொதித்தெழுந்து, அடக்குமுறையை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்திய திமுக அரசு, திருச்சி திராவிட மணியின் படுகொலைக்கு என்ன பதில் கூறப்போகிறது? அமைச்சருக்கு ஒரு நீதி? சாமானிய மக்களுக்கு வேறு நீதியா?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட திருச்சி மாவட்டம், பழூர் காந்திநகரைச் சேர்ந்த திராவிடமணி காவல் துறையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திருச்சி மாநகர், ஜீயபுரம் தனிப்படை காவல்துறையினர் கடந்த 26-ம் தேதி திராவிட மணியை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்துசென்று, 27-ம் தேதி வரை போக்குவரத்துக் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திராவிட மணி கடந்த 28-ம் தேதி உயிரிழந்தார்.
நல்ல உடல் நலத்துடன் இருந்த திராவிட மணி திருச்சி காவல்துறையினர் கடுமையாக தாக்கியதிலேயே உயிரிழந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து நீதி விசாரணைக்கோரி போராடிவரும் நிலையில், திமுக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலங்கடத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் அடுத்தடுத்து காவல்நிலைய மரணங்கள் தொடர்ந்து வருவது அரசப் பயங்கரவாதத்தின் உச்சமாகும். திராவிட மணி எத்தகைய குற்றம் புரிந்திருந்தாலும் சட்டப்படி, நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டணையைப் பெற்று தந்திருக்க வேண்டும். அதனைவிடுத்து விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரே அடித்துக் கொன்றிருப்பது கொடுங்கோன்மையாகும்.
தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? இல்லை மன்னராட்சியா? அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறையின் அத்துமீறிய கைதுக்கு எதிராகக் கொதித்தெழுந்து, அடக்குமுறையை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்திய திமுக அரசு, தம்பி திராவிட மணியின் படுகொலைக்கு என்ன பதில் கூறப்போகிறது? அமைச்சருக்கு ஒரு நீதி? சாமானிய மக்களுக்கு வேறு நீதியா? தமிழக காவல்துறை ஆணையர் கைதிகளிடம் இரவு நேரத்தில் விசாரணை மேற்கொள்ளக்கூடாதென்று உத்தரவிட்ட பிறகும், விசாரணை மரணங்களைக் குறைக்க வேண்டுமென்று முதல்வரே நேரடியாக அறிவுறுத்திய பிறகும், காவல்நிலைய மரணங்கள் தொடர்வது காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது.
» திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்கு புறப்பட்டுச் சென்ற சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்!
கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறை விசாரணையின்போது, கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் மரணத்துக்கு நீதிகேட்டு குரல்கொடுத்த முதல்வர் ஸ்டாலின், தமது மூன்றாண்டு ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுள்ள 25-க்கும் மேற்பட்ட சிறை மரணங்களைத் தடுக்கத்தவறி வேடிக்கைப் பார்ப்பது ஏன்? அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்று இன்னும் எத்தனை பேரின் பச்சைப்படுகொலைக்கு திமுக அரசு துணைநிற்கப்போகிறது?
அடிப்படை மனித உரிமை, சமத்துவம், சமூக நீதி, சட்டத்தின் ஆட்சி, கருத்துச்சுதந்திரம் என்றெல்லாம் பேசிவிட்டு, காவல்துறைக்கே களங்கம் ஏற்படுத்திய காவலர்களைக் காப்பாற்ற முனைவது எவ்வகையில் நியாயமாகும்? இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் ஆட்சியா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆகவே, திமுக அரசு இனியும் காலங்கடத்தாமல் தம்பி திராவிட மணியின் மரணத்துக்குக் காரணமான காவலர்கள் மீது உடனடியாக கொலை வழக்கினைப் பதிந்து கைது செய்வதுடன், விரைவான, நியாயமான நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago