சென்னை: பாலஸ்தீன மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளைக் கண்டித்தும், இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டுமெனக் கோரியும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மறைமுகமாக இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்வதைக் கண்டித்தும், அக். 7-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இடதுசாரி இயக்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், “2023-ம் ஆண்டு அக்.7-ம் தேதி அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடங்கிய கொடூரத் தாக்குதல், 2024-ம் ஆண்டு அக். 7-ம் தேதி வரை ஓர் ஆண்டாக நீடித்து வருகிறது. ‘ஹமாஸ் அமைப்பின் தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம்’ என்று கூறிக்கொண்டு தொடங்கப்பட்ட இந்தத் தாக்குதலால் இதுவரை அப்பாவி பாலஸ்தீனர்கள் 42,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 30,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காசாவில் பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், விளையாட்டுத் திடல்கள், அகதிகள் முகாம்கள் மற்றும் ஐநா நிவாரண முகாம்கள் உட்பட கூட்டம் கூட்டமாக மக்கள் இருக்கிற இடங்கள் மீது, குண்டு மழை பொழிந்து மனிதத் தன்மையற்ற படுகொலையை இஸ்ரேல் நடத்தி வருகிறது. அப்பாவி மக்களை மேற்கிலிருந்து ரப்பா வரை நகர்த்தி ஒரு “கான்சன்ட்ரேஷன் கேம்ப்” போல ஒரே இடத்தில் அகதிகளாக குவித்து வைத்துள்ளது. அவர்கள் தங்குமிடம், உணவு, உடை, மருத்துவம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் ஏதுமின்றி தமது சொந்த நாட்டிலேயே அகதிகளாக உழல்கின்றனர்.
சமீபத்தில், ஹமாஸ் இயக்கத்தினுடைய தலைவர்களை குறி வைத்துத் தாக்கி, இஸ்மாயில் ஹனியை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் சுட்டுக் கொன்றது இஸ்ரேல் ராணுவம். தற்போது பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஹிஸ்புல்லா இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுக்கிறோம் என்று கூறி, லெபனான் நாட்டில், மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமுற்றும், வீடுகளை இழந்தும் விரட்டியடிக்கப்ட்டுள்ளனர். ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நசருல்லா சமீபத்தில் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தப் பிராந்தியம் முழுவதையும் போர்க்களமாக மாற்றியுள்ளது இஸ்ரேல்.
» ‘கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்கவும்’ - லட்டு சர்ச்சையில் உச்ச நீதிமன்றம் கருத்து
» மதுரையில் ஒரே நேரத்தில் 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெற்றோர் திரண்டதால் பரபரப்பு
இஸ்ரேல் தொடுத்து வரும் போரை நிறுத்த வேண்டும்; அப்பாவி பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் தடுத்து நிறுத்த வேண்டும்; அமைதி திரும்ப வேண்டும்; ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் இரண்டு தேசங்கள் என்ற முறையில் பாலஸ்தீன பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கையை செவிமடுக்க இஸ்ரேல் மறுத்து வருகிறது.
அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், தங்களுடைய வர்த்தக நலன்களுக்காகவும் உலக மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளவும் கண்ணை மூடிக்கொண்டு இஸ்ரேலின் கொடூரத்தை ஆதரித்து வருகின்றன. இந்தியா மேலோட்டமாக அமைதி திரும்ப வேண்டும் என்று கூறினாலும் ஐக்கிய நாடுகள் சபையில் போர் நிறுத்தத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் நடுநிலை வகித்தது மிகவும் கண்டனத்துக்குரியது ஆகும்.
மேலும் ஒரு தலைப்பட்சமான இந்தத் தாக்குதலில், அப்பாவி பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிப்பதற்கு இந்தியாவில் தனியார் மூலம் தயாரிக்கப்படுகிற குண்டுகளும், குப்பிகளும் உபகரணங்களும், ட்ரோன்களும் நரேந்திர மோடி அரசால் அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் இஸ்ரேல் நாட்டில் உற்பத்தித் துறையில் பணியாற்றிய பாலஸ்தீனர்களை விரட்டியடித்து விட்டு அந்த இடங்களில் இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை அமர்த்தி இஸ்ரேலுக்கு தேவையான ஆள் பலத்தை வழங்கி போருக்கு ஆதரவாகவும் இருந்து வருகிறது மத்திய பாஜக கூட்டணி அரசு.
பாலஸ்தீன மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளைக் கண்டித்தும், இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டுமெனக் கோரியும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மறைமுகமாக இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்வதைக் கண்டித்தும், அக்டோபர் 7ஆம் தேதியை பாலஸ்தீன ஒருமைப்பாட்டு, ஆதரவு நாளாக கடைப்பிடிக்க வேண்டுமென்று அகில இந்திய அளவில் சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்) லிபரேசன், பார்வர்ட் பிளாக் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் நான்கும் கூட்டாக முடிவெடுத்துள்ளன.
அந்த அடிப்படையில் இந்தியா முழுவதும் அனைத்துப் பெரு நகரங்கள், மாவட்ட தலைநகரங்களில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.
அக்டோபர் 7-ஆம் தேதி அன்று சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்.எல்)உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago