“திமுக கூட்டணிக்குள் மோதலை உண்டாக்கும் முயற்சி பலிக்காது” - பவள விழாவில் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: “நாம் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து கொள்கை எதிரிகளுக்கு பொறாமையாக இருக்கிறது. இவர்களுக்குள் மோதல் வராதா? பகையை வளர்க்க முடியாதா என்று வேதனையில் பொய்களைப் பரப்பி, அற்பத்தனமான காரியங்களைச் செய்து, தற்காலிகமாக சந்தோஷம் அடைந்து கொள்கிறார்கள். அவர்கள் கனவு எப்போதும் பலிக்காது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற திமுக பவள விழாப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “எல்லோரும் சொன்னார்கள்… நம்முடைய கூட்டணி அமைந்த பிறகு, தமிழகத்தில் நடந்த அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால், நம்முடைய கூட்டணி கொள்கைக் கூட்டணி மட்டும் அல்ல; வெற்றிக் கூட்டணி. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்துதான் அகில இந்திய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கான இந்தியா கூட்டணியே அமைக்கப்பட்டது. சில கட்சிகள் உருவாக்கும் கூட்டணிகள், தேர்தல் நேரத்தில் உருவாகி, தேர்தல் முடிந்ததும் கலைந்துவிடும். ஆனால் நம்முடைய கூட்டணி அப்படி அல்ல.

நாம் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து கொள்கை எதிரிகளுக்கு பொறாமையாக இருக்கிறது. இவர்களுக்குள் மோதல் வராதா? பகையை வளர்க்க முடியாதா என்று வேதனையில் பொய்களைப் பரப்பி, அற்பத்தனமான காரியங்களைச் செய்து, தற்காலிகமாக சந்தோஷம் அடைந்து கொள்கிறார்கள். அவர்கள் கனவு எப்போதும் பலிக்காது. நாடாளுமன்ற, சட்டமன்ற வெற்றிக் கணக்கில் நம்முடைய அணி ஐக்கியமாகவில்லை. பாசிசத்தையும், மதவாதத்தையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க கூடாது என்பதற்காக, ஐக்கியமாகி இருப்பவர்கள் நாம்.

சென்னையில் நடைபெற்ற பவளவிழா பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றியபோது, உறுதியோடு ஒரு விஷயத்தை சொன்னேன். “திமுகவின் நூற்றாண்டுக்குள், அனைத்து அதிகாரமும் கொண்டவைகளாக மாநில அரசுகளை மாற்றும் அரசியலமைப்புச் சட்டதிருத்தம் கொண்டு வர, அனைத்து சட்ட முன்னெடுப்புகளையும் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக, உறுதியாக செய்யும்!" என்று நான் அறிவித்தேன். அந்த பயணத்தில் நாம் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகள்: சமுதாயத்தில் சீர்திருத்தம், பொருளாதாரத்தில் சமத்துவம், அரசியலில் ஜனநாயகம். இதை உருவாக்கத்தான் கழகம் தோன்றியது; தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதை நிறைவேற்றிக் காட்டுவதற்காகத்தான் கட்சியும், ஆட்சியும் இருக்கிறது. இந்த உன்னதமான மூன்று கொள்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், அதிகாரம் பொருந்தியவைகளாக மாநிலங்கள் இருக்க வேண்டும். அதனால்தான் மாநில சுயாட்சிக் கொள்கையை தன்னுடைய இறுதி உயிலாக அண்ணா வலியுறுத்தினார். மாநில சுயாட்சிக் கொள்கையை அடைவதற்காக, பல்வேறு முன்னெடுப்புகளை திமுக எடுத்திருக்கிறது.

முக்கியமாக, விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் தலைவர் கருணாநிதி. அதுமட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். இப்போது இருக்கும் ஒன்றிய அரசு, மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மாற்றும் முயற்சியில்தான் இருக்கிறது. அதனால்தான், தமிழ்நாட்டில் ஒலித்த மாநில சுயாட்சி முழக்கம், இன்றைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

மாநிலங்களை ஒடுக்கி, ஒற்றை ஆட்சித்தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றுவதற்கு ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தைக் கொண்டுவரப் பார்க்கிறது பா.ஜ.க. அரசு. ஒரே நாடு – ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது. இதைச் சொன்னால் - "1967 வரைக்கும் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒன்றாகத்தான் தேர்தல் நடந்தது" என்று சொல்கிறார்கள். அப்போது இந்திய நாட்டின் மக்கள்தொகை என்ன? இப்போது மக்கள்தொகை என்ன? அன்றைய இந்தியாவும் - இன்றைய இந்தியாவும் ஒன்றா? அன்றைய வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இன்றைய வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

நான் ஆதாரத்தோடு சொல்கிறேன். 28 மாநிலங்கள் - 8 யூனியன் பிரதேசங்கள் இருக்கிறது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இது சாத்தியமா? 1951-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுமைக்கும் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 1,874. ஆனால், 2024 தேர்தலில் 8,360 பேர் போட்டியிட்டார்கள். அன்றைய தேர்தலும் இன்றைய தேர்தலும் ஒன்றா?

அதுமட்டுமல்ல, நாம் எழுப்பும் பல்வேறு கேள்விகளில் முக்கியமானது, இவர்களால் நாடாளுமன்றத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிந்ததா? நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையே, ஏழு கட்டங்களாகத்தான் நடத்த முடிந்தது. நாடாளுமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாதவர்கள் - நாடாளுமன்றத் தேர்தலோடு, இந்தியாவில் இருக்கும் அனைத்துச் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவோம் என்று சொல்வது - "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் - வானம் ஏறி வைகுண்டம் காட்டுவேன்" என்று சொல்வது போன்று இருக்கிறது. இப்போது காஷ்மீரில் தேர்தல் நடக்கிறது. 90 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்துகிறார்கள். இந்த நிலையில் ஒரே தேர்தல் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?

ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே உணவு - ஒரே பண்பாடு - ஒரே தேர்வு - ஒரே தேர்தல் - ஒரே வரி என்று ஒரே பாட்டை பாடிக்கொண்டு இருக்கிறார்கள். நடைமுறை சாத்தியமற்ற, சிக்கல் நிறைந்த பிரச்சினை இது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கும், மக்களாட்சித் தத்துவத்துக்கும் விரோதமானது. இதனால் என்ன நடக்கும்? பல மாநில அரசுகளின் பதவிக்காலம் குறையும். மாநிலங்களில் குழப்பம் ஏற்படும்.

மக்களவையின் வரலாறு என்ன? நாடாளுமன்ற மக்களவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டு இருக்கிறது. இப்போது இருப்பதும், பெரும்பான்மை பலம் கொண்ட பா.ஜ.க. அரசு அல்ல. 272 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கட்சி அல்ல பா.ஜ.க. 240 உறுப்பினர்கள் கொண்டதுதான். அதனால், மிகவும் எச்சரிக்கையோடு பா.ஜ.க தலைமை செயல்பட வேண்டும்.

அண்ணா நாடாளுமன்ற மாநிலங்களவையில் சொன்னதைதான் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புறேன்… “நமது அரசமைப்புச் சட்டத்தின், கூட்டாட்சி முறையிலுள்ள பல ஒற்றைத் தன்மைகளை எதிர்த்துப் போரிடுகின்ற ஒரு தாக்குதல் முன்னணியாக நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கருதிக் கொள்ளுங்கள்” என்று அண்ணா முழங்கினார். அதே முழக்கத்தில், நான் சேர்த்துச் சொல்வது, அந்த தாக்குதல் முன்னணியில், திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல - இங்கே இருக்கும் தோழமைக் கட்சிகளும் சேர்ந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம் விதைக்க நினைக்கும் சிந்தனைகளுக்கான அடித்தளம்தான் தோழமை இயக்கங்கள் ஒன்றாக இருக்கும் இந்த மேடை.

நிறைவாக நான் சொல்ல விரும்புவது, 75 ஆண்டுகளைக் கடந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், நூற்றாண்டைக் கடப்பதற்குள், மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

Loading...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்