இயற்கை விவசாயி பாப்பம்மாள் உடல் அடக்கம்: தலைவர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி

By டி.ஜி.ரகுபதி 


கோவை: வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமான கோவையைச் சேர்ந்தவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான இயற்கை விவசாயி பாப்பம்மாளின் உடல் இன்று (செப்.28) அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு பிரதமர், முதல்வர், மத்திய இணையமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள, தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் என்ற ரங்கம்மாள். 108 வயதான இவர், கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். இயற்கை விவசாயத்தில் இவர் ஆற்றி வரும் சேவையை பாராட்டி, கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்தது. மேலும், திமுக சார்பில், கடந்த மாதம் ‘பெரியார் விருது’ இவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று (செப்.27) இரவு அவர் காலமானார்.

பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக பாப்பம்மாளின் உடல், தேக்கம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. இன்று (செப்.28) அவரது உடலுக்கு திமுக சார்பில் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, பாஜக சார்பில் தேசிய மகளிரணி தலைவரான வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, தேக்கம்பட்டியில் உள்ள மயானத்தில் இன்று (செப்.28) அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

உயிரிழந்த பாப்பம்மாள், கடந்த 1959-ம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகவும், 1964-ல் காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும், தேக்கம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1970-ம் ஆண்டு முதல் 45 ஆண்டுகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உழவர் விவாதக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

தலைவர்கள் இரங்கல்: முன்னதாக காலமான பாப்பம்மாள் மூதாட்டிக்கு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,‘‘மூதாட்டி பாப்பம்மாளின் மறைவு வேதனை அளிக்கிறது. இயற்கை விவசாயத்தில் அவர் முத்திரை பதித்தார். அவருடைய அடக்கம் மற்றும் கனிவான இயல்புக்காக மக்கள் அவரை போற்றினர். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’’ எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,‘பேரறிஞர் அண்ணா, கலைஞர் மீதும் பற்றுக் கொண்டு, கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் தன்னை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர். இந்தி எதிர்ப்பு போராட்டம், நீட் எதிர்ப்புப் போராட்டம் போன்ற அனைத்தையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர். தனது இறுதிமூச்சு வரை சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்து வந்தவர். இன்று சொல்லொணாத் துயரத்தில் நம்மையெல்லாம் ஆழ்த்திவிட்டு அவர் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார். என் குடும்பத்தில் ஒருவரை பிரிந்த வலியுடன் தவிக்கிறேன். அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,‘‘பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டி காலமானார் என்ற செய்தி மனவருத்தம் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அம்மாவின் ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்’’எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்