சென்னை: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு காரணமானோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மோகன்ராஜ், தமது நிலத்தை பறிக்க அரசியல் கட்சி ஆதரவுடன் நடந்த முயற்சிகளால் மனம் உடைந்து, அதற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மோகன்ராஜ் பாட்டாளி மக்கள் கட்சியில் நிர்வாகியாக உள்ளார். செஞ்சி வட்டத்திற்குட்பட்ட தேவனூர் கிராமத்தில் மோகன்ராஜின் சகோதரர் செல்வம் என்பவருக்கு சொந்தமாக 27 சென்ட் நிலம் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த நிலத்தை செல்வம் பெயரில் அவரது குடும்பம் வாங்கியுள்ளது. அந்த நிலத்தில் மோகன்ராஜ் கடந்த 8 ஆண்டுகளாக வேளாண்மை செய்து வருகிறார்.
செல்வத்திற்கு சொந்தமான இடத்திற்கு அருகில் நிலம் வைத்திருக்கும் தேவராஜ் என்பவர், அவரது நிலத்திற்கு செல்வத்தின் நிலம் வழியாகத் தான் கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு மோகன்ராஜ், செல்வம் உள்ளிட்டோர் அனுமதி அளிக்காத நிலையில், காவல்துறை, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரின் துணையுடன் மோகன்ராஜுக்கு பல வழிகளில் தேவராஜ் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். அதனால், மோகன்ராஜும், அவரது குடும்பத்தினரும் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
» தேவரா Review: ‘சுறா’, ‘சிலம்பாட்டம்’ நிழலாடும் ஒரு ‘பான் இந்தியா’ மசாலா!
» பிரசாத தரத்தை உறுதி செய்ய கோயிலில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி: தமாகா வலியுறுத்தல்
மோகன்ராஜ் குடும்பத்தினரின் நிலத்தை ஆக்கிரமிக்கும் தேவராஜின் முயற்சிக்கு ஆதரவாக அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலர் களமிறங்கியுள்ளனர். மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக நீரோடை செல்வதாகவும், அதை மோகன்ராஜ் குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டிய அவர்கள், அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 27 ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அதற்கு முன்பாகவே கடந்த 25 ஆம் தேதி சம்பந்தப்பட்ட நிலத்தை மேல்மலையனூர் வட்டாட்சியர் வளர்மதி தலைமையில் துணை வட்டாட்சியர், மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நில அளவையர் அடங்கிய குழு நிலத்தை ஆய்வு செய்து அந்த நிலம் மோகன்ராஜின் அண்ணன் செல்வத்துக்கு சொந்தமானது என கூறியுள்ளனர். ஆனாலும் அதை தேவராஜும், மார்க்சிஸ்ட் கட்சியினரும் ஏற்கவில்லை.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு கடந்த 27 ஆம் தேதி மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அதை ஆய்வு செய்த வட்டாட்சியர் நிலம் தொடர்பான உண்மை நிலையை விளக்கியதுடன், இந்த சிக்கலுக்கு தீர்வு காண வரும் அக்டோபர் 7&ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அமைதிப் பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் தான் தேவராஜும், மார்க்சிஸ்ட் கட்சியினரும் தொடர்ந்து கொடுத்து வந்த தொல்லைகளால் மன உளைச்சல் அடைந்த மோகன்ராஜ், 27 ஆம் தேதி பிற்பகலில் தமது நிலத்தைப் பறிக்கும் நோக்குடன் தொடர்ந்து தமக்கு தொல்லை கொடுத்து வந்த மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் உள்ளிட்ட 23 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்து விட்டு, அங்கேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்ட மோகன்ராஜ் மருத்துவம் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். மோகன்ராஜ் விவசாயம் செய்து வந்த நிலம் அவரது குடும்பத்திற்கு சொந்தமானது; அதில் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் இல்லை என்று வருவாய்த்துறை ஆவணங்கள் தெளிவாக குறிப்பிடுகின்றன. வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் நிலத்தை நேரில் அளந்து உறுதி செய்துள்ளனர்.
அவ்வாறு இருக்கும் போது மக்களுக்காக போராடுவதாகக் கூறிக் கொள்ளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனிநபர் ஒருவரின் நிலப்பறிப்புக்கு ஆதரவாக களமிறங்கி, பொய்யான தகவல்களை அடிப்படையாக வைத்து நெருக்கடி கொடுத்து ஏழை விவசாயி ஒருவரின் தற்கொலைக்கு காரணமாகியிருப்பது கண்டிக்கத்தக்கது. 33 வயது இளம் விவசாயியான மோகன்ராஜின் தற்கொலைக்கு காரணமானவர்களை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது.
தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு இளம் விவசாயி மோகன்ராஜ் அவரது தற்கொலை கடிதத்தில் கூறியுள்ளவாறு அவரது தற்கொலைக்கு காரணமான 23 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். தற்கொலைக்குத் தூண்டியவர்களுக்கு சட்டப்படியான தண்டனையை பெற்றுத் தர வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மோகன்ராஜின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago