ராணிப்பேட்டை: “இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழகம்தான் முதல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். 31 லட்சம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.28) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில். 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழகம்தான் முதல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் , இந்த விழாவில் பங்கேற்று இருப்பது நமக்கெல்லாம் கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவர். உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருப்பது அவருக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே இது கிடைத்திருக்கக்கூடிய பெருமை.வேளாண் குடும்பத்தில் பிறந்து பெருமைமிகு அரசுப் பள்ளியில் படித்த இவர், இந்தளவுக்கு உயர அவருடைய தன்னம்பிக்கையும், அறிவாற்றலும்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
» தேவரா Review: ‘சுறா’, ‘சிலம்பாட்டம்’ நிழலாடும் ஒரு ‘பான் இந்தியா’ மசாலா!
» மயான பூமியை தனியார்மயமாக்கும் தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெறுக: இபிஎஸ்
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய டாடா நிறுவனத்தின் தலைவராக இருக்கின்ற சந்திரசேகரன், இந்திய இளைஞர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அவர் விளங்கிக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் தொழில் முகங்களில் முக்கியமானது டாடா நிறுவனம். எஃகு, தகவல் தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து, ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருட்கள், விருந்தோம்பல், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் தடம் பதித்திருக்கின்ற டாடா குழுமம், உலக அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் இந்திய பன்னாட்டு குழுமம் என்பது நமக்கெல்லாம் பெருமை அளிக்கக்கூடியதாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
டாடா குழுமத்தின் ஒரு அங்கமாக விளங்கிக் கொண்டிருக்கின்ற டாடா மோட்டார்ஸ் லிமிடெட், பல நாடுகளில் வாகன உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ள முன்னணி நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்துக்கும், தமிழகத்துக்கும் பல ஆண்டுகள் உறவு இருக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில், உலக அளவில் சிறந்து விளங்குகின்ற TCS நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய டெலிவரி சென்டர் அலுவலகம் சென்னையில்தான் அமைந்திருக்கிறது. ஹோட்டல் துறையில் தனி அந்தஸ்து பெற்றிருக்க தாஜ் ஹோட்டல்கள் தமிழகத்தில் பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் மற்றும் டாடா குழுமம் இணைந்து உருவாக்கிய டைட்டன் நிறுவனம், கடிகாரங்கள் மற்றும் கண் பராமரிப்பு பிரிவுகளிலும், தனிஷ்க் ஆபரணங்கள் பிரிவிலும் சிறந்து விளங்குகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் டாடா பவர் என்ற பெயரில் எரிசக்தி திட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாடா எலெக்ட்ரானிக்ஸ் எனும் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவப்பட்டிருக்கிறது. எனது கனவு திட்டமாக விளங்கிக் கொண்டிருக்கின்ற “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக இணைந்து டாடா நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை எல்லாம் தமிழ்நாட்டின் மீது நீங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையின் அடையாளங்களாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் இங்கே இருப்பதால், நம்முடைய மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து வருகிறது. இந்த நல்லுறவு மென்மேலும் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதிவிரைவாக வளர்ந்து கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று மிக முக்கியமான நாளாக இந்த நாள் விளங்கிக் கொண்டிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் தன்னுடைய திட்டத்துக்காக, ராணிப்பேட்டை மாவட்டத்தை தேர்ந்தெடுத்தற்காக நான் முதலில் நன்றி சொல்கிறேன்.ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ததுடன், ஐந்தாயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளிக்க இருக்கிறது. இந்தப் பணிகளை விரைந்து முடித்து, திறப்பு விழாவுக்கும் சந்திரசேகரன் வரவேண்டும் என்று நான் இந்த நேரத்தில் என்னுடைய வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். அதுமட்டுமல்ல, இன்னொரு வேண்டுகோளும் உண்டு. உங்களுடைய நிறுவனங்கள் மூலமாக கூடுதல் முதலீடுகளை நீங்கள் தமிழகத்தில் செய்யவேண்டும். செய்து கொண்டிருக்கிறீர்கள். அதை நான் மறுக்கவில்லை; அது உங்கள் கடமை. ஏனென்றால், இது என் மாநிலம் அல்ல, உங்கள் மாநிலம் அல்ல; நம்முடைய மாநிலம். இது உங்களுடைய மாநிலம்.
நான் அடிக்கடி குறிப்பிடுவது, அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி. அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொழில் தொடங்குவது கூடுதல் மகிழ்ச்சி. இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் நான் பகிர்ந்துகொள்ள விரும்புறேன். 1973-ம் ஆண்டு மறைந்த முதல்வர் கருணாநிதி இதே ராணிப்பேட்டையில்தான் முதல் சிப்காட்டை தொடங்கினார். ஐம்பது ஆண்டுகள் கடந்து, இங்கே பல்வேறு நிறுவனங்களை பார்ப்பது பெருமையாக இருக்கிறது.
தமிழகம்தான் இந்தியாவின் வாகன உற்பத்தி தலைநகரம். அதுமட்டுமல்ல, E-Vehicle-களின் தலைநகரம். ஃபோர்டு, ஹூண்டாய், ரெனோ நிஸான் என்று சர்வதேச வாகன நிறுவனங்களும் இங்கே இருக்கிறது. டாடா மாதிரி சர்வதேச மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்ற வாகனங்களை தயாரிக்கின்ற தொழிற்சாலையும் இங்கேதான் இருக்கிறது. கூடுதல் தகவல், இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மொத்த மின் வாகனங்களில், 40 விழுக்காடு தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுமட்டுமல்ல, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியிலும் இந்தியாவிலேயே தமிழகம்தான் நம்பர் ஒன்.
நிதி ஆயோக் கொடுத்த ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டிலும் தமிழகம்தான் நம்பர் ஒன் என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது.
நேற்றுகூட,‘தி இந்து’ நாளேட்டில் ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்தேன். தமிழகத்தின் வளர்ச்சி தனித்தன்மை வாய்ந்தது. பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூகநீதியை உள்ளடக்கிய வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் போன்ற கொள்கைகள் அடித்தளமாக கொண்ட ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதால், தமிழகம் மற்ற மாநிலங்களிலிருந்து சற்று தனித்து இன்றைக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்று அந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட்டு காட்டியிருந்தேன்.
தொழிற்துறைக்கு நான் வழங்கியிருக்கின்ற இலக்கு 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றவேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்ள சிறந்த மாநிலமாக மேம்படுத்தவேண்டும். அந்தப் பயணத்தில் நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். 31 லட்சம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.
உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, முதலீடுகளை நாங்கள் ஈர்த்திருக்கிறோம். முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்ல, அதை விரைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். அதற்கு சான்று தான் இந்த விழா. டாடா மோட்டார்ஸின் இந்தத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த ஆண்டு மார்ச் மாதம்தான் போடப்பட்டது. ஆறு மாதத்துக்குள் இந்தத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்றைக்கு நடந்திருக்கிறது என்றால், தமிழகத்தின் வளர்ச்சிக்காக, தமிழக இளைஞர்களின் உயர்வுக்காக நம்முடைய திராவிட மாடல் அரசு, அனைத்தையும் செய்யும்.
அதற்கு டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் எங்களுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும். நிறைவாக, மதிப்புக்குரிய சந்திரசேகரனுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்து, அடுத்து விரைவில் அவர் புதிய தொழிற்சாலையை கொண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago