சென்னை: “திமுக அரசு, மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இச்செயல், இரக்கமற்ற கல் நெஞ்சு கொண்டவர்களிடம் அரசாங்கம் சிக்கி சீரழிவதைக் காட்டுகிறது. மேலும், மயானத் தொகை வரைவோலை மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது, திராவிட மாடல் ஆட்சியாளர்களின் குரூர மனோபாவத்தை தோலுரித்துக் காட்டுகிறது.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 40 மாதங்களாக நடைபெறும் திமுக-வின் காட்டாட்சி தர்பார் ஆட்சியில், அப்பாவி மக்களை வாட்டி வதைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது கொடுமையின் உச்சம். செப். 27 அன்று சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒருசில தீர்மானங்கள், சென்னை மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து நேரடியாக பணத்தைப் பிடுங்கும் வகையில் அமைந்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது.
சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு தீர்மானங்கள் மக்களை நேரடியாக பாதிக்கக் கூடியவைகளாகும். ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு. (சொத்து வரி உயர்த்தப்படும்போதெல்லாம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வும் மறைமுகமாக உள்ளடங்கியுள்ளது.
மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்குவது. தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு அளிப்பது வழக்கம். தனியாருக்கு சம்பள உயர்வு என்பது அந்தத் தனியார் நிறுவனத்தில் லாபம் ஈட்டுதலைப் பொறுத்தது. ஆண்டுதோறும் சம்பள உயர்வு நிலையானதல்ல.
» புரட்டாசி மாத ஏகாதசி வழிபாடு; ஸ்ரீவில்லி., ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பக்தர்கள் தரிசனம்
» ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: பிரிட்டன் பிரதமர் ஆதரவு
அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம்தான் சம்பள உயர்வு. ஆனால், ஏற்கெனவே 100 சதவீதம் மின்கட்டண உயர்வை அறிவித்ததுடன், ஆண்டுதோறும் மின் கட்டணம் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்துள்ள ஸ்டாலினின் திமுக அரசு, ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வை அறிவித்து, சென்னை மாநகர மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. இதன்மூலம் குடிநீர் வரி, கழிவு நீர் அகற்றல் வரி என்று அனைத்து வரிகளும், சொத்து வரி உயர்வுக்கேற்ப தானாகவே உயர்த்தப்பட்டுவிடும். இத்துடன் குப்பைகள் அகற்றும் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் சொந்த வீடு, வணிக வளாகம் செய்பவர்கள் மட்டுமல்ல, வாடகைக்கு உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே விலைவாசி உயர்வால் தினசரி வாழ்க்கையையே தட்டுத் தடுமாறி நடத்திக்கொண்டிருக்கும் 90 சதவீத சாமான்ய மக்களின் வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்படும்.
இன்றைய சென்னை மாநகராட்சியில் குண்டும் குழியுமான சாலைகள், நிரம்பி வழியும் கழிவு நீர் குழாய்கள், குடிநீர் குழாய்களில் கலக்கும் கழிவு நீர், நேற்று முன்தினம் பெய்த 10 செ.மீ. மழைக்கே பல் இளிக்கும் மழைநீர் வடிகால் அமைப்பு, வெள்ள நீரால் நிரம்பி வழிந்த சாலைகள், மழை நீரால் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறியுள்ள பல மாநகராட்சி பூங்காக்கள் என்று காணப்படும் சென்னை மாநகராட்சி, இனி ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரியை அறிவித்துள்ளதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசின் சேவைகளில், பணிகளில் ஒருசிலவற்றை தனியார்மயமாக்குதல் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றாலும், வியாபார நோக்கில் மயானத்தை தனியார்மயமாக்கல் என்பதை அதிமுக கடுமையாக எதிர்க்கும் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன். இறப்புக்குப் பின் நிம்மதியாக அடக்கம் செய்யப்படுவதை சேவையாகக் கருதி, அரசு மயானங்கள் தண்ணீர் வசதி, நவீன எரியூட்டுக் கூடம் போன்ற வசதிகளுடன், குறைந்த கட்டணத்தில் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இறப்பவர்களின் இறுதிச் சடங்குகளை குறைந்த கட்டணத்தில் குறித்த நேரத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், ஸ்டாலினின் திமுக அரசு, மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இச்செயல், இரக்கமற்ற கல் நெஞ்சு கொண்டவர்களிடம் அரசாங்கம் சிக்கி சீரழிவதைக் காட்டுகிறது.மேலும், மயானத் தொகை வரைவோலை (DD) மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உறவுகள் மறைந்த துக்கத்தில் இருப்பவர்கள் வரைவோலை எடுக்க வங்கிக்கு போய் வரிசையில் நிற்க வேண்டும்; ஆன்லைனில் செலுத்த இ-சேவை மையத்தை நாட வேண்டும் என்பது திராவக மாடல் ஆட்சியாளர்களின் குரூர மனோபாவத்தை தோலுரித்துக் காட்டுகிறது.
சென்னை மாநகராட்சியில் தற்போது பணிபுரிந்துவரும் பெரும்பாலான தூய்மைப் பணியாளர்கள் 2007-2008 ஆம் ஆண்டுகளில், அப்போதைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்கள். திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டிருந்தாலும், அதன் பின்பு நடந்த 10 ஆண்டுகால அதிமுகவின் அரசுகளில், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிக்கான ஒப்பந்தத்தை வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும், அந்நிறுவனம் நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு, குறைந்த சம்பளத்தில் அண்டை மாநிலம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஆட்களை நியமிக்க உள்ளதாகவும், இதை எதிர்த்து சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முன்பு தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று போன்ற காலகட்டங்களில் தினசரி தூய்மைப் பணிகளை மேற்கொண்ட, சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் தூய்மைப் பணியாளர்களின் பணி பாதுகாப்பை ஸ்டானின் திமுக அரசு உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
ஸ்டாலினின் திமுக அரசு, ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று முறை மின்கட்டண உயர்வு, 100 சதவீதம் சொத்து வரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு, பால் பொருட்கள் விலை பல தடவை உயர்வு, அரசு கட்டணங்கள் பல மடங்கு உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை உயர்வு, கடந்த மார்ச் மாதம் முதல் நியாய விலைக் கடைகளில் பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் குறித்த நேரத்தில் வழங்கப்படாமை என்று மக்கள் கடுமையான காலக்கட்டத்தில் வாழ்க்கை நடத்திவரும் வேளையில், சென்னை மாநகராட்சியில் ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வையும், மயான பூமியை தனியார்மயமாக்கும் தீர்மானத்தையும் உடனடியாக திரும்பப் பெறவும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிடவும் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago