அந்த 471 நாட்கள்: செந்தில் பாலாஜி கைது முதல் 6 நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுதலை வரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து, 471 நாட்களாக புழல் சிறையில் இருந்த அவர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டார். வாரத்தில் 2 நாட்கள் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது உட்பட 6 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2015, 2017 மற்றும் 2018 ஆகிய காலகட்டங்களில் 3 மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த 3 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த மூல வழக்குகளின் அடிப்படையில், செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும், அவரது வங்கி கணக்கில் ரூ.1.34 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி அவரை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.

இதய அறுவை சிகிச்சை: அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு ஜூன் 22-ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், அமலாக்கத் துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்த பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி்க்கு எதிராக சுமார் 3 ஆயிரம் பக்க ஆவணங்களுடன் 120 பக்க குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் உள்ளிட்ட ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில், அவருக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் மறுப்பு தெரிவித்த நிலையில், ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே, இந்த வழக்கு காரணமாக இலாகா இல்லாத அமைச்சராக இருந்துவந்த அவர் கடந்த பிப்ரவரியில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி அவருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, சாட்சி விசாரணையும் தொடங்கியது.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வில் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, என்.ஆர்.இளங்கோவும், அமலாக்கத் துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகி வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் செந்தில் பாலாஜிக்கு 6 நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி ஆகியோர் நேற்று உத்தரவிட்டுள்ளனர். நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளதாவது: சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்ட குற்றத்துக்காக குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை மட்டுமே சிறை தண்டனை விதிக்க முடியும். செந்தில் பாலாஜிக்கு எதிரான 3 வழக்குகளில் 2,000 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது. அந்த வழக்குகளின் விசாரணையை முடிக்க 3 - 4 ஆண்டு ஆகும்.

ஜாமீன் என்பது சட்டப்பூர்வ உரிமை: மனுதாரருக்கு அதுவரை ஜாமீன் கிடையாது என மறுக்க முடியாது. ஜாமீன் என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ள சட்டப்பூர்வமான உரிமை. செந்தில் பாலாஜி 15 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டால், அரசியலமைப்பு சட்ட பிரிவு 21-ன் கீழ் தனிமனித சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதுபோல ஆகிவிடும். எனவே, செந்தில் பாலாஜிக்கு கீழ்க் கண்ட நிபந்தனைகளுடன் ஜாமீ்ன் வழங்கப்படுகிறது. அவர், ரூ.25 லட்சத்துக்கு இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்கவேண்டும். தனக்கு எதிரான வழக்குகளில் அரசு தரப்பு சாட்சிகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொண்டு கலைக்க கூடாது. ஒவ்வொரு வாரமும் திங்கள், வெள்ளி ஆகிய கிழமைகளில் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதேபோல, 3 மோசடி வழக்குகள் தொடர்பாக ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்பு ஆஜராக வேண்டும். பாஸ்போர்ட்டை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்து, தனக்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறினால், அவரது ஜாமீன் ரத்தாகிவிடும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் ஒப்படைப்பு: இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதி மன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு, புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி, காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள விவரத்தை அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கவுதமன், பரணிக்குமார் ஆகியோர் நீதிபதியிடம் தெரிவித்தனர். தலா ரூ.25 லட்சத்துக்கான இரு நபர் ஜாமீன்உத்தரவாதத்தையும் தாக்கல் செய்தனர்.

ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவில் சில குழப்பங்கள் இருப்பதாக கூறிய நீதிபதி, இதுகுறித்து அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷிடம் விளக்கம் கோரினார். செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க ஆட்சேபம் இல்லை என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் உறவினர்கள் சிவப்பிரகாசம், தியாகராஜன் ஆகியோர் தலா ரூ.25 லட்சத்துக்கு ஜாமீன் உத்தரவாதம் அளித்தனர். செந்தில் பாலாஜியின் பாஸ்போர்ட்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

உற்சாக வரவேற்பு: இதையடுத்து, புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்குமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இரவு 7.05 மணி அளவில் புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார். சிறைக்கு வெளியே திரண்டிருந்த திமுகவினர் மலர் தூவியும், பட்டாசு வெடித்தும், அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்