சென்னை: தமிழகத்துக்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. அதை மதித்து தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்றாண்டுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரூ. 10 லட்சம் கோடி முதலீடுகளில் 60% பணிகள் நிறைவேறியிருக்கின்றன; மீதமுள்ள 40% பணிகளை நிறைவேற்ற ஆணையிட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள் குறித்த குழப்பங்களைத் தீர்க்கும்படி பாமக வலியுறுத்தி வரும் நிலையில், திமுக அரசு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வெளியிட்டு வரும் புள்ளிவிவரங்கள் குழப்பத்தை அதிகரித்திருக்கின்றன. சென்னையில் உள்ள தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கு நேற்று நேரில் சென்று அங்குள்ள பணியாளர்களை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அதன்பின் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் தான் தமிழ்நாட்டுக்கு ஈர்க்கப்பட்ட முதலீடுகளில் 60% வந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா நேற்று முன்நாள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்த புள்ளி விவரத்தை தான் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தெரிவித்திருக்கிறார். அதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மொத்தம் 891 தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், அவற்றில் 535 ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன என்பது தான் திமுக அரசின் வாதம் ஆகும்.
திமுக ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் உண்மையாகவே 60% ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்து விட்டன என்றால், அதை எண்ணி மகிழ்ச்சியடையும் முதல் அமைப்பு பாட்டாளி மக்கள்கட்சியாகத் தான் இருக்கும். ஆனால், இந்த அளவுக்கு முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வரவில்லை என்பது தான் உண்மை. தமிழக அரசு கடந்த காலங்களில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் வாயிலாகவே இதை நிரூபிக்க முடியும்.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வது தொடர்பாக இதுவரை 891 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் பட்டுள்ளன. அவற்றில் முதலமைச்சரின் துபாய் பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட 6 ஒப்பந்தங்கள் உள்ளிட்ட 225 ஒப்பந்தங்கள் நடப்பாண்டின் தொடக்கத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன்பாக கையெழுத்திடப்பட்டவை ஆகும். 631 உடன்பாடுகள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது கையெழுத்திடப்பட்டவை.
அதன்பின் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் போது அமெரிக்காவில் 19, ஸ்பெயினில் 3, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் தலா 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. சென்னையில் ஆகஸ்ட் 21&ஆம் தேதி நடந்த தொழில் முதலீட்டு நிகழ்ச்சியில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன என்பது குறித்த புள்ளிவிவரங்களை மட்டும் தான் அரசு வெளியிட்டதே தவிர, எத்தனை ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்தன என்பது குறித்து எந்த புள்ளிவிவரத்தையும் கடந்த வாரம் வரை வெளியிட்டதில்லை. கடந்த ஜூன் 28&ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தொழில்துறை மானியக் கோரிக்கையில் கூட இது குறித்த விவரங்கள் எதுவும் இடம் பெறவில்லை. இப்போது தான் திடீரென 60% ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக தமிழக அரசு முதன்முறையாக கூறியுள்ளது. அது நம்பும்படியாக இல்லை.
சென்னையில் கடந்த ஆகஸ்ட் 21&ஆம் தேதி நடந்த புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் ( எண்:1260), உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட திட்டங்களில் ரூ.59,454 கோடி மதிப்புள்ள 32 தொழில் திட்டங்களுக்கு இன்றைய நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் எதுவும் அதற்கு முன்பாகவோ, பின்பாகவோ செயல்பாட்டுக்கு வந்ததாக தகவல்கள் இல்லை. அவ்வாறு இருக்கும் போது கடந்த ஆகஸ்ட் 21&ஆம் தேதி 32 ஆக இருந்த செயல்பாட்டுக்கு வந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை அடுத்த ஒரு மாதத்திற்குள் 402 ஆக அதிகரித்து விட்டதாக தொழில்துறை அமைச்சர் இராஜா கூறுகிறார். இது என்ன மாயம்? என்பதைத் தான் தமிழக மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
மீண்டும், மீண்டும் கூறுகிறேன்... தமிழ்நாட்டுக்கு 60% முதலீடு வந்து விட்டன என்றால் அதில் எனக்கு மகிழ்ச்சி தான். தமிழ்நாட்டு மக்களும் அதைத் தான் விரும்புகிறார்கள். முதலீடு வந்தது உண்மை என்றால், செயல்பாட்டுக்கு வந்த தொழில் திட்டங்கள் எவை, எவை? அவை எங்கு, எந்த தேதியில் தொடங்கப்பட்டன? எந்தெந்த தொழில் திட்டங்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்து உற்பத்தியைத் தொடங்கியுள்ளன? பிற திட்டங்களில் செயலாக்கப் பணிகள் எத்தனை விழுக்காடு நிறைவடைந்துள்ளன?
செயல்பாட்டுக்கு வந்த தொழில் திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் எத்தனை பேர் வேலையில் சேர்ந்துள்ளனர்? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டால், தொழில் முதலீடுகள் தொடர்பாக இப்போது எழுப்பப்படும் அனைத்து ஐயங்களுக்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைத்து விட முடியும்.
ஆனால், வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டால், வாழைப்பழ நகைச்சுவையைப் போல, தொழில்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையே வெள்ளை அறிக்கை தான் என்று கூறுகிறார். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் கொள்ளத் தேவையில்லை. 60% முதலீடுகள் வந்தது உண்மை என்றால், அது குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடலாம். வெள்ளை அறிக்கை வெளியிடத் தயங்குவதிலிருந்தே முதலீடுகள் வரவில்லை என்ற ஐயம் உறுதியாகிறது.
ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. அதை மதித்து தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தொழில் முதலீடுகள் ஈர்ப்பதில் தனது தோல்வியை தமிழக அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago