ராமநாதபுரம் அருகே சுற்றுலா பேருந்தில் தீ: 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் அருகே சுற்றுலா பேருந்தில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து தீ பரவியதில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்க மாநிலம் பாக்கோடா மாவட்டத்தில் உள்ள கோடல்பூரிலிருந்து கூக்ளி, ஹவுரா, பத்துவான் மாவட்டங்களைச் சேர்ந்த 77 பேர் கடந்த 22 ஆம் தேதி பேருந்து ஒன்றில் யாத்திரை பயணம் மேற்கொண்டனர். பல்வேறு மாநிலங்கள் வழியாக திருப்பதி வந்த இவர்களுடன் காஞ்சிபுரத்தை சேர்ந்த சீனிவாசன் என்ற சுற்றுலா வழிகாட்டியும் இணைந்துள்ளார்.

இவரது வழிகாட்டுதலோடு காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம், சென்னை, புதுச்சேரி வழியாக ஸ்ரீரங்கம் வந்துள்ளனர். அங்கிருந்து கிளம்பிய இவர்கள் 29 ஆம் தேதி இரவு ராமேஸ்வரம் வந்துள்ளனர்.

யாத்திரை பயணம் மேற்கொள்ளும் இடங்களில் தங்களுக்கு தேவையான உணவுகளை சமையல் செய்துகொள்ளும் வகையில் ஸ்டவ் அடுப்பு, காஸ் சிலிண்டர்கள், பாத்திரங்கள் மற்றும் உணவு பொருட்களையும் பேருந்தில் எடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் பயணம் செய்த பேருந்து இன்று ராமநாதபுரம் திருப்புல்லாணிக்கு வந்தது. அப்போது பேருந்தில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் அனைவரும் திருப்புல்லாணியில் உள்ள பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE