போலீஸ் மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலரும் பலி

திருச்சியில் காதல் திருமணம் செய்த போலீஸ் மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலரும் உயிரிழந்தார்.

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த சேகர்(44), அவரது 2-வது மனைவி விஜயலட்சுமி(35) ஆகியோர் கடந்த புதன்கிழமை பலத்த தீக்காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இருவரும் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். கொட்டப்பட்டு பகுதியில் தனி வீடு கட்டி கணவருடன் வசித்து வந்த விஜயலட்சுமி திருச்சி மாநகர குற்றப்பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார்.

இந்த சம்பவம் குறித்து பொன்மலை காவல் நிலைய போலீஸார் நடத்திய விசாரணையில், புதன்கிழமை யன்று கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் சேகர், விஜயலட்சுமியை மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளதும், தீப்பற்றிய விஜயலட்சுமி சேகரை கட்டிப்பிடித்ததில் அவருக்கும் பலத்த தீக்காயமேற்பட்டது என்பது தெரியவந்தது.

ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருவரும் அனுமதிக்கப்பட்டனர். போலீஸார் சேகர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் விஜயலட்சுமி வியாழக்கிழமை உயிரிழந்தார். இதனால் சேகர் மீதான கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சேகர் வெள்ளிக்கிழமை மதியம் உயிரிழந்தார். இதையடுத்து சேகரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படை க்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE