‘லிப்ஸ்டிக்’ பூசியதால் பெண் டபேதார் இடமாற்றமா? - சென்னை மேயர் அலுவலகம் மறுப்பு

By ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் அலுவலக பெண் டபேதார் உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்) பூசிக்கொண்டு பணிக்கு வந்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் பரவி வரும் நிலையில், அதை மேயர் அலுவலகம் மறுத்துள்ளது.

ஆவடியைச் சேர்ந்தவர் மாதவி (50). கடந்த 2009-ம் ஆண்டு அலுவலக உதவியாளராக சென்னை மாநகராட்சியில் பணியில் சேர்ந்தார். மாநகராட்சி மேயராக ஆர்.பிரியா பொறுப்பேற்ற பிறகு, அவரது டபேதாராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் மணலி மண்டல அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்கு, அவர் உதட்டுச் சாயம் பூசி பணிக்கு வருவதுதான் காரணம் என தகவல் வெளியானது.

மாதவிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அலுவலகத்துக்கு உரிய நேரத்தில் வராமல் இருப்பது தொடர்பான கேள்விக்கு, ‘எனக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அலுவலகத்துக்கு, அலுவலக நேரத்துக்கு முன்னதாக வர இயவில்லை. அலுவலகத்தை விட்டு தினமும் காலதாமதமாக இரவு 8 அல்லது 9 மணிக்கு தான் புறப்படுகிறேன். வீடு சென்று சேர இரவு 11 மணி ஆகிறது. சமைத்து சாப்பிட்டு படுக்க இரவு 1 மணி ஆகிறது. அதனால் மீண்டும் காலையில் பணிக்கு வர உடம்பு சரியில்லாமல் போகிறது. கடந்த 2 நாட்களாக தான் அலுவலகத்தை விட்டு முன்னதாக செல்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முறைப்பணி நாட்களில் முறையாக பணிக்கு வராமல் தவிர்ப்பது குறித்த கேள்விக்கு, ‘நான் முறையாக பணிக்கு வந்துள்ளேன். முறைப்பணி செய்யாத நாட்களை குறிப்பிட்டு காட்டவும்’ என தெரிவித்துள்ளார் மாதவி. உயரதிகாரிகளின் ஆணையை உதாசீனப்படுத்துதல் குறித்த கேள்விக்கு, ‘எனக்கு என்ன ஆணை வழங்கினீர்கள், எந்த ஆணையை உதாசீனப்படுத்தினேன் என்று விவரமாக கூறவும்’ என கேட்டுள்ளார்.

அலுவலக நடைமுறையை மீறுதல் தொடர்பான கேள்விக்கு, ‘தாங்கள் என்னை உதட்டுச் சாயம் பூசக்கூடாது என்று கூறினீர்கள். நான் அதை மீறி பூசினேன். இது குற்றம் என்றால், எந்த அலுவலக ஆணையில் உள்ளது என தெரிவிக்கவும். மாநகராட்சியில் யாரிடமும் பேசக் கூடாது, எந்த பிரிவுக்கும் போகக்கூடாது என்றால் அது மனித உரிமை மீறலாகும். அதற்கு உண்டான அரசாணையை குறிப்பிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாதவியின் உதட்டுச் சாயம் குறித்த விளக்கம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக டபேதார் மாதவியிடம் கேட்டபோது, “என்னை கடந்த மாதம், உதட்டு சாயம் பூசக் கூடாது என மேயரின் நேர்முக உதவியாளர் தெரிவித்தார். அதை மீறி நான் உதட்டுச் சாயம் பூசிக்கொண்டு பணிக்கு வந்தேன். அடுத்த சில தினங்களிலேயே பணிக்கு தாமதமாக வருவது உள்ளிட்ட 5 கேள்விகளுடன் விளக்கம் கேட்டு எனக்கு மெமோ கொடுத்தனர். நான் உரிய விளக்கம் அளித்த நிலையிலும், மணலிக்கு பணியிடமாற்றம் செய்தனர். எனது பணியிட மாற்றத்துக்கு நான் உதட்டுச் சாயம் பூசி பணிக்கு வந்தது தான் காரணம்” என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக நாம் மேயர் அலுவலகத்தில் கேட்டபோது, “மாதவி தொடர்ந்து பணிக்கு தாமதமாக வந்தார். அலுவலகத்துக்கு மேயர் வந்துவிட்ட பிறகும், அவர் பணியில் இல்லை. தாமதமாக வந்துவிட்டு, உடை மாற்றச் செல்கிறேன் என்று சென்றுவிடுவார். இவரின் பணியிட மாற்றத்துக்கு, பணிக்கு தாமதமாக வந்ததே காரணம். உதட்டுச் சாயம் பூசக்கூடாது என இங்கு யாரும் சொல்லவில்லை” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்