சென்னை: சென்னை கண்ணப்பர் திடலில் 22 ஆண்டுகளாக சுகாதாரமற்ற நிலையில் வசித்து வந்த 114 பயனாளிகளுக்கு, `இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியாக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு ஒதுக்கீடு ஆணைகளை அமைச்சர் உதயநிதி நேற்று வழங்கினார்.
சென்னை ரிப்பன் மாளிகை அருகில் வசித்து வந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 2002-ம் ஆண்டு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக அகற்றப்பட்டன. இக்குடும்பங்கள் கண்ணப்பர் திடல் பகுதியில் கைவிடப்பட்ட மாநகராட்சி கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டன. அன்று முதல் இன்று வரை, அடிப்படை வசதிகள் இன்றி அங்கு பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் `இந்து தமிழ் திசை' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, அங்கு 114 பயனாளி குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. அவர்களுக்கு மூலக்கொத்தளத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வழங்க இருந்த நிலையில், பயனாளி பங்குத்தொகை ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்தை செலுத்த இயலவில்லை என பயனாளிகள் தெரிவித்தனர். இலவசமாக வீடு கோரி சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, பயனாளி பங்குத் தொகையில் 3-ல் 2 பங்கை மாநகராட்சி வழங்க முன்வந்தது.
ஒரு பங்கை பயனாளிகள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை பயனாளிகள் ஏற்றுக்கொண்ட நிலையில், அவர்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் நிகழ்ச்சி கண்ணப்பர் திடலில் நேற்று நடைபெற்றது. இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்று 114 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
» ஆசியாவில் இந்தியாவின் பலம் அதிகரிப்பு: லோவி இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில் தகவல்
» காஷ்மீர் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் இந்து அகதிகள்
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உங்களின் 22 ஆண்டுக்காலக் கனவை இன்றைக்கு இந்த அரசு நிறைவேற்றி இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை அவசியம். திமுகவை பொறுத்தவரை சொல்வதைச் செய்யும் இயக்கம். அடுத்த மழைவருவதற்குள் உங்களுக்கு வீடு வழங்கப்படும் என்று முதல்வர் கூறியிருந்தார். சொன்னபடியே உங்களுக்கு தற்போது வீடு ஒதுக்கியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார். ஆணைகளை பெற்ற பயனாளிகள், தங்களின் நிலையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, வீடு பெற்றுத்தர உதவிய `இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்பி, எம்எல்ஏக்கள் பரந்தாமன், தாயகம் கவி, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் சு.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago