“கோயில்கள் இனி அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது” - திருப்பதி லட்டு விவகாரத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: “திருப்பதி லட்டு விவகாரம் இந்துக்களின் ஆழ்மனதில் ஆழமான காயத்தையும், சீற்றத்தையும், ஏற்படுத்தியிருக்கிறது. ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் பக்தர்களால் கோயில்கள் நிர்வகிக்கப்பட வேண்டும்” என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் இதயம் நொறுங்கி போயிருக்கிறார்கள். இந்த திருப்பதி லட்டு விவகாரம் இந்துக்களின் ஆழ்மனதில் ஆழமான காயத்தையும், சீற்றத்தையும், ஏற்படுத்தியிருக்கிறது. இது 1857-ஆம் ஆண்டு வாழ்ந்த சிப்பாய் முட்டினி, பிரிட்டிஷ்காரர்களின் தீய நோக்கத்தை (மிருக கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்களை தருவது) எதிர்த்து போராடியதை தான் நினைவுக்கு கொண்டு வருகிறது, அந்தச் செயல் பசுவை அவர்களின் தாயாக நினைக்கும் பல இந்து சிப்பாய்களின் மத உணர்வை காயப்படுத்துவதாக அப்போது இருந்தது. இப்போதும் இந்த லட்டு சர்ச்சையால், இந்து சமூகத்தின் உணர்வுகள் எவ்வாறு மிக ஆழமாக புண்பட்டிருக்கிறது என்பதை பார்க்கிறோம். இது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இது, இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்களின் பேராசையை பிரதிபலிக்கும் ஒரு வன்மச் செயலாகும். உலகம் முழுவதும் வாழும் இந்துக்களின் தெய்வ நம்பிக்கை மற்றும் தெய்வ உணர்வோடு விளையாடியதற்காக, அவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க பட வேண்டும். இந்தக் கொடூரமான குற்றத்துக்கு எவரேனும் வெளியில் இருந்து உதவி இருந்தால், அவர்களையும் சிறையிலடைத்து அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். இது போன்ற செயல்கள், ஒருபோதும் மறுபடி நடக்காதிருக்க கோயில் நிர்வாகத்தினை, இந்து மத சன்யாசிகளிடமோ, ஆன்மிக தலைவர்களிடமோ அல்லது மத பிரமுகர்களிடமோ ஒப்படைப்பது மிக மிக முக்கியமாகும்.

இந்தப் புனிதமான கடமையை பக்தர்களிடம் ஒப்படைத்தால், ஆலயங்கள் பெரு மதிப்போடும், அர்ப்பணிப்போடும் நிர்வகிக்கப்படும், அல்லாது சுயநலமிக்க அதிகாரிகள், இரக்கமற்ற தொழிலதிபர்கள் அல்லது தனிப்பட்ட ஆதாயத்துக்காக பணம் பொருளுக்காகவும் இது போன்ற நிறுவனங்களை அழிப்பதே தலையாய கடமையாக கொண்டுள்ள அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது.

ஒரு பக்தன் ஒருக்காலும் இதுபோன்ற தெய்வ நிந்தனை செயலை கனவிலும் நினைக்க மாட்டான். நாம் இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளின் ஆன்மிக குருமார்களை கொண்டு ஒரு குழு அமைத்து, நம் ஆலயங்களை நிர்வகித்து அதன் புனிதம் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் குழுவில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் அதில் தலையிட்டு தீர்த்து வைக்க ஒரு அரசாங்க அதிகாரியும் இருக்க வேண்டும். எனினும் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு, மற்ற மத நம்பிக்கைகளான: வக்ப் போர்டு, SGPC அல்லது CCI போன்று மத வாரியமிடமே இருக்க வேண்டும்.

இந்த விவகாரம், ஒரு சாதாரண மனிதன் தினம் உண்ணும் உணவின் கலப்படத்தை மிக பெரும் அளவில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. லட்டுகளில் சேர்க்கப்பட்ட நெய்யே கலப்படம் என்றால், எவ்வாறு வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் நெய் மற்றும் மற்ற உணவு பொருட்களின் தரத்தை நம்ப முடியும்? அனைத்து உணவு பொருட்களும் முழுமையாக சரிபார்க்கப்பட வேண்டும். முக்கியமாக சைவம் என முத்திரையிடப்பட்ட உணவுப் பொருள்களில் அசைவ பொருள்கள் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறதா என உறுதி செய்ய வேண்டியது தவிர்க்க பட முடியாததாகும். சைவ முத்திரை பதித்த உணவு பொருட்களில் அசைவத்தை கலப்படம் செய்ததாக குற்றம் சாட்டப்படுபவர் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

நெறிமுறைகளும் பண்புகளும் நிலை நிறுத்தப்பட்டிருக்கும், மனிதநேய மிகுந்த ஒரு சமுதாயத்தை நாம் கண்டிப்பாக நிர்மாணிக்க வேண்டும். இந்தச் சம்பவத்தால், பல பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உறங்க முடியாமல் இருக்கிறார்கள். இங்கு, பக்தி மற்றும் பிராணாயாமம் போன்ற பயிற்சிகள் மனதில் அமைதியை கொண்டு வரும். சடங்குகள் மூலம் அவரவர்களை புனிதப் படுத்திக்கொள்ள விருப்பமுள்ளவர்கள், ஒரு கிண்ணத்தில் நீரை எடுத்துக் கொண்டு மந்திரத்தை ஜெபிக்கவும்” என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE