திருமண நிதியுதவித் திட்டத்துக்கு தங்க நாணயம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு

By கி.கணேஷ்

சென்னை: தமிழக அரசின் சமூக நலத் துறையால் செயல்படுத்தப்படும் திருமண நிதியுதவி திட்டங்களில் பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் வழங்குவதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தமிழக அரசின் சமூக நலத்துறையால், மகளிர் நலன் அடிப்படையில் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம், ஈவேரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.

இந்த நான்கு திட்டங்களிலும் பயனாளிகளுக்கு தகுதி அடிப்படையில் நிதி மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு ஒரு சவரன் அதாவது 22 காரட் மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த 4 திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 8 ஆயிரம் எண்ணிக்கையிலான 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை தமிழக அரசின் சமூக நல ஆணையரகம் கோரியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE