குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் அக்.14-ல் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட அனைவரும் வரும் அக்டோபர் 14 அன்று நேரில் ஆஜராக வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக டெல்லி சிபிஐ போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவகுமார் ஆகிய 6 பேர் மீது சிபிஐ போலீஸார் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்களான டாக்டர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் டிஜிபி-யான டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், வணிக வரித்துறை அதிகாரிகள் வி.எஸ்.குறிஞ்சிச்செல்வன், எஸ்,கணேசன், சுகாதாரத் துறை அதிகாரிகள் டாக்டர். லட்சுமி நாராயணன், ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையர் ஆர். மன்னர் மன்னன், காவல் ஆய்வாளர் வி.சம்பத், சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஏ.பழனி உள்ளிட்ட 21 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி. சஞ்சய் பாபா முன்பாக திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் 250 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்களுடன், சுமார் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் பென்-டிரைவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆவணங்கள் அனைத்தையும் காகிதத்தில் பிரின்ட் எடுத்து வழங்க வேண்டுமென குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் பெற ஏதுவாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும், என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE