“ஸ்டாலின், திருமாவளவனின் திட்டமிட்ட நாடகமே மது ஒழிப்பு மாநாடு” - எல்.முருகன் புதிய குற்றச்சாட்டு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: “மது ஒழிப்பு மாநாடு முதல்வரும், திருமாவளவனும் திட்டமிட்டு நடத்துகின்ற நாடகம்,” என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவோம், சிங்கப்பூராக மாற்றுவோம் என்றார். அதன் பிறகு துணை முதல்வராக இருந்த அவர் தற்போது முதல்வராக உள்ளார்.. ஆனால் கூவம், கூவமாகவே தான் உள்ளது. கூவம் நதிக்காக ஒதுக்கிய பணம் கூவத்துக்குள் போட்ட நிதியாக கூவத்துக்குளேயே கரைந்து போய்விட்டது. கூவம் ஆற்றை சீர்படுத்த பெரிய மாஸ்டர் பிளான் வேண்டும், பெரிய அர்பணிப்பு வேண்டும். எந்த சார்பு நிலையும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். முதலில் கூவத்தை முழுமையாக சர்வே எடுக்க வேண்டும்.

இதுபோன்ற விஷயங்களில் பிரதமர் மோடியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். குஜராத்தில் சபர்மதி ஆறு மூழ்கிப் போய் ஒன்றும் இல்லாமல் இருந்தது. ஆனால், அந்த ஆற்றில் இருந்த ஆக்கிரமிப்புகளை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அகற்றி, சுத்தப்படுத்தி தற்போது அகமதாபாத் நகரில் ஒரு ஜீவநதியாக அந்த ஆறு இருந்து வருகிறது. எந்தவித ஆய்வும் இல்லாமல் கூவத்தை சீரமைப்பதாக கூறி, எந்த பணியையும் செய்யவில்லை. அதனால் தான் காங்கிரஸ் எம்பி-யான கார்த்திக் சிதம்பரம் கூவம் நதிக்கு ஒதுக்கிய ரூ.500 கோடி தொடர்பாக வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்கிறார்.சரியான கேள்வியைத் தான் அவர் கேட்டிருக்கிறார். நானும் கேட்கின்றேன் வெள்ளை அறிக்கை கொடுங்கள். உண்மையாக சீரமைக்க வேண்டும் என்றால் முதலில் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

குஜராத்தில் நீர் நிலைகள் எவ்வாறு சிறப்பாக இருக்கின்றன என்பதை போய் பார்த்துவிட்டு வரவேண்டும். அரசியலை மறந்துவிட்டு நல்ல முன்னுதாரணமாக உள்ள மாநிலத்தைச் சென்று பார்க்க வேண்டும். அங்கு பார்த்துவிட்டு வந்து, அதனை இங்கே செயல்படுத்த வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள். இலங்கையில் எந்த அதிபர் வந்தாலும் அது அந்த நாட்டு விவகாரம். அதேநேரத்தில் எந்த அதிபர் வந்தாலும் நாம் சுமுகமான உறவை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம்.

தொடர்ந்து மீனவர்களை மீட்டு கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். மேலும், மீனவர்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க 1 லட்சம் படகுகளுக்கு ஜிபிஎஸ் கருவிகளை கொடுத்துள்ளோம். தமிழகத்துக்கு மட்டும் படகுகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்த ரூ.17 கோடி நிதியை கொடுத்துள்ளோம்.மது ஒழிப்பு மாநாடே ஒரு பெரிய நாடகம். முதல்வரும், திருமாவளவனும் திட்டமிட்டு செயல்படுத்துகின்ற ஒரு நாடகம். முதல்வர் 17 நாட்கள் அமெரிக்கா சென்றார்.

அங்கிருந்து எதிர்பார்த்த முதலீடு தமிழகத்துக்கு வரவில்லை. இது பற்றி மக்கள் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக, மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் நாடகம்தான் இது.தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக சீரழிந்து இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கு பார்த்தாலும் கொலைகள். கொலையில் சரியான விசாரணை கிடையாது. சரியான கைதுகள் கிடையாது. எனவே, சட்டம் - ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE