இ-பைக், வாடகை டூவீலரை தடுக்கக் கோரி புதுச்சேரியில் அக்.1-ல் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: வாடகை டூவீலர், இ-பைக்கை தடுக்கக் கோரி புதுச்சேரியில் அக்டோபர் 1-ம் தேதி ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, அனைத்து சங்கத்தினரும் கூட்டாக முடிவெடுத்துள்ளனர்.

புதுவை அனைத்து ஆட்டோ சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் முதலியார் பேட்டை சிஐடியு மாநில குழு அலுவலகத்தில் சிஐடியு ஆட்டோ சங்க தலைவர் மணவாளன் தலைமையில் இன்று (செப்.23) நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, ஏடியு, எல்எல்எஃப், புதுச்சேரி மாநில ஆட்டோ ஓட்டுநர் சங்கம், ஐஎன்டியுசி , என்ஆர்டியுசி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக நிர்வாகிகள் கூறியது: “ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வை நாசமாக்கும் வாடகை டூ வீலர், இ-பைக் திட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். புதுச்சேரி அரசு, ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆன்லைன் ஆப் உருவாக்கி குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயம் செய்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்த முடிவெடுத்துள்ளோம்.

முதல் கட்டமாக, வரும் 27, 28, மற்றும் 30-ம் தேதிகளில் வாகன பிரச்சார இயக்கமும். அக்டோபர் 1-ம் தேதி செவ்வாய்க்கிழமை புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மறைமலை அடிகள் சாலை சுப்பையா சிலை அருகில் இருந்து பேரணியாக சட்டப்பேரவை நோக்கிச் செல்வது என முடிவெடுத்துள்ளோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE