சென்னை மூர் மார்க்கெட் அருகே 30 ஆண்டுகளாக வசிக்கும் 130 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு கோரி மறியல்

By ச.கார்த்திகேயன்

சென்னை: நேரு விளையாட்டரங்கம் அருகில் புதிய மூர் மார்க்கெட் பகுதியில் 30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வரும் 130 குடும்பங்களுக்கும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் ஒதுக்க வலியுறுத்தி சூளை பகுதியில் பொதுமக்கள் இன்று (செப்.23) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நேரு விளையாட்டரங்கம் அமைப்பதற்கு முன்பாக அந்த இடத்தில் வசித்து வந்த 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அகற்றப்பட்டு, தற்போது புதிய மூர் மார்க்கெட் இயங்கி வரும் நேரு விளையாட்டரங்கத்தின் பின்புறம் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டரங்கை விரிவுபடுத்தும்போது, அந்த இடத்தில் வசித்து வந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பெரும்பாக்கத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன.

விளையாட்டரங்கத்துக்கு சொந்தமில்லாத இடத்தில் வசித்தவர்களுக்கு வீடு ஒதுக்கவில்லை. விளையாட்டரங்க இடத்துக்கும், அதற்கு வெளியே வசித்து வந்தவர்களுக்கும் இடையில் விளையாட்டரங்கம் சார்பில் உயரமான தடுப்புச் சுவரும் எழுப்பப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்குடும்பங்கள் தங்களுக்கும் வீடு கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அங்கு 2011-ம் ஆண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்து, அரசிடம் நிவாரணம் பெற்றதற்கான சான்றுகளையும் அவர்கள் வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும், அப்பகுதியில் கணக்கெடுப்பு நடத்தி அடையாள எண்களை வழங்கியுள்ளது. ஆனால், இதுவரை அவர்களுக்கு வீடு ஒதுக்கவில்லை.

இதனிடையே, அப்பகுதியின் அருகில் கண்ணப்பர் திடலில் வசித்து வந்த 114 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை இன்று வழங்கப்பட்ட நிலையில், தங்களுக்கு வழங்கப்படாததை கண்டித்து ராஜா முத்தையா சாலையில் சூளை பகுதியில் மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், அவர்களை சமாதானம் செய்து கலைந்துபோகச் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE