விருதுநகர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகரில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க துணைப் பதிவாளர் அலுவலகத்தில் இன்று தீடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு 40 நாள்களுக்கு மேலாகியும் பணம் பாலுக்கான பட்டுவாடா செய்யப்படவில்லை. அதோடு, தமிழக அரசு அறிவித்த லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 ஊக்கத் தொகையும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக விருதுநகரில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க துணைப் பதிவாளரை இன்று காலை சந்தித்து பேசச் சென்றனர்.

அப்போது, அவரது அறைக்குள் வரும் நபர்கள் செல்போனை வெளியே கொடுத்துவிட்டு வர வேண்டும் என துணைப் பதிவாளர் சம்பத் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் அலுவலகத்திற்குள் திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு, தங்களது கோரிக்கைகள் குறித்தும், செல்போனை அறைக்குள் கொண்டுசெல்ல அனுமதிக்காத துணைப் பதிவாளரைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து, பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க மாவட்டத் தலைவர் முனீஸ்வரன், மாவட்டச் செயலாளர் பாலமுருகன் ஆகியோர் கூறுகையில், “பால் உற்பத்தியாளர் நல சங்கத்தின் சார்பாக விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க துணைப் பதிவாளரை முறையான அனுமதி பெறப்பட்டு நேரில் சந்திக்கச் சென்றோம். அப்போது, எங்களின் செல்போன்கள் அனைத்தையும் பையில் போடுமாறு கட்டாயப்படுத்தினார். இது சரியில்ல என்று எடுத்துரைத்தோம்.

பால் உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 ஊக்கத்தொகை 2 மாதங்களாக வழங்கப்படவில்லை. பால் பணம் பட்டுவாடா 10 நாள்களுக்கு ஒரு முறை செய்யப்பட வேண்டும். ஆனால், 40 நாட்கள் ஆகியும் இன்றும் வழங்கவில்லை. இது சம்பந்தமாக பேச வரும் தலைவர்களை ஒருமையில் பேசுவது செல்போனை வாங்கி வைத்துக்கொள்வது போன்ற செயல்கள் சரி அல்ல. இதை வலியுறுத்தித்தான் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினோம்” என்றார்.

இது குறித்து, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க துணைப் பதிவாளர் சம்பத் கூறுகையில், “நான் கடந்த மார்ச் மாதம் பொறுப்பேற்றேன். அதுவரை விருதுநகர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 11,869 லிட்டர் பால் கொள்முதல் இருந்தது. தற்போது 17,850 லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி அனைத்து ஆவணங்களும் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அவ்வாறு பராமரிக்க அறிவுறுத்தினேன்.

மேலும், அறைக்குள் பேச்சுவார்த்தை நடக்கும்போது யாராவது எதையாவது செல்போனில் படம் எடுத்து தவறான தகவலை வெளியிடும் சம்பவங்கள் நடக்கின்றன. அதுபோன்று ஏதும் நடக்காமல் இருக்கவே செல்போன்களை அறைக்குள் கொண்டுவர அனுமதிக்கவில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE