சிவகாசி ஆலைகளில் தீபாவளி பட்டாசு உற்பத்தி மும்முரம்: வடமாநில ஆர்டர் குறைவால் விற்பனையாளர்கள் கவலை

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: தீபாவளிக்கு இன்னும் 40 நாட்களே உள்ளநிலையில், சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வடமாநில ஆர்டர் குறைவால், பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை, இணைப்பு வெடிகள் உற்பத்தி செய்ய தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் 60 சதவீதம் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்துக்கும் மேல் சிவகாசியில்உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் பட்டாசுகளில் 10 சதவீதம் தமிழகத்திலும், 90 சதவீதம் வெளி மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே விற்பனை களைகட்டியது. உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் 95 சதவீதத்துக்கும் மேல் விரைவாக விற்பனையானது. தமிழகத்தில் ரூ.450 கோடிக்கும், நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கும் பட்டாசு வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஆண்டு பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த தொடர் விபத்துகள், உரிமம் ரத்துசெய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் உற்பத்திக்கான அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம், சிறு பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தீபாவளிக்கு இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில் பட்டாசு ஆலைகளில் மும்முரமாக உற்பத்தி நடைபெற்று வருகிறது.

சிவகாசி பகுதியில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆடிப்பெருக்கு அன்றுபூஜை போடப்பட்டு, தீபாவளி விற்பனை தொடங்கியது. ஆனால், வடமாநில ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வராததால்,உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். வட மாநிலங்களில் சில இடங்களில் கிடங்குகளில் பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால், பட்டாசுகளை வாங்கி இருப்பு வைக்க, வடமாநில வியாபாரிகள் தயங்குகின்றனர் என்று கூறப்படுகிறது.

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அனுமதியின்றி இயங்கி வந்த பட்டாசு ஆலை மற்றும் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர்உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கடந்த செப்டம்பரில் அனுமதியின்றி இயங்கிய பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் பெரோஸாபாத் மாவட்டத்தில் கடந்த வாரம் பட்டாசு ஆலை மற்றும் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இதனால் வட மாநிலங்களில் பட்டாசு கிடங்கு மற்றும் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் வடமாநில வியாபாரிகளின் கொள்முதல் மந்தமாக உள்ளது. எனினும், ஆயுத பூஜைக்குப் பின்னர் பட்டாசுவிற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் காத்திருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE