ஆஸ்திரேலிய விண்வெளி முகமை அதிகாரிகள் தமிழக தொழில்துறை அமைச்சருடன் சந்திப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பெங்களூரு விண்வெளி கண்காட்சிக்கு வந்த ஆஸ்திரேலிய விண்வெளி முகமை அதிகாரிகள், தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவை சந்தித்ததுடன், ஐஐடி சென்னை, விண்வெளி தொடர்பான புத்தாக்க நிறுவனங்களையும் பார்வையிட்டனர்.

பெங்களூருவில் நடைபெற்ற விண்வெளி கண்காட்சியில் பங்கேற்பதற்காக, ஆஸ்திரேலிய அரசின் முகமையான ஆஸ்திரேலியன் விண்வெளி முகமையின் (ஏஎஸ்ஏ)தலைமை அதிகாரி என்ரிகோ பாலர்மொ தலைமையிலான குழுவினர் இந்தியா வந்தனர். கண்காட்சியை முடித்துவிட்டு அவர்கள், கடந்தசெப்.20 மற்றும் 21-ம் தேதிகளில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம்அமைந்துள்ள ஹரிகோட்டாவை பார்வையிட்ட பிறகு சென்னைவந்தனர். சென்னையில், விண்வெளி தொடர்பான நிறுவனங்களின் அதிகாரிகள், தமிழக அரசின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினர்.அப்போது, இந்திய விண்வெளிதுறையில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

சென்னையில், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவை சந்தித்ததுடன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் (டிட்கோ). தமிழகத்தின் ஏரோஸ்பேஸ் தொழில் மேம்பாட்டு துறையினருடனும் ஆலோசனை நடத்தினர். இதுதவிர, ஆர்பிட்எய்டு, ஸ்பேஸ்டக், ஸ்பேஸ் ஜோன் இந்தியா மற்றும் வேலான் ஸ்பேஸ் ஆகிய குறிப்பிட்ட விண்வெளி சார்ந்த புத்தாக்க நிறுவனங்களுடனும் ஆலோசனை நடத்தினர். இதுதவிர, விண்வெளித்துறையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ஏஎஸ்ஏ தலைவர் என்ரிக், ஒரு முதலீட்டாளராக, புத்தாக்க நிறுவனமாக, எவ்வாறு ராக்கெட் ஏவுதல், செயற்கைக்கோள் தகவல் தொழி்நுட்பம் போன்றவற்றில் ஆஸ்திரேலியா எந்த அளவில் உதவ முடியும் என்பது குறித்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, ஏஎஸ்ஏ குழுவினர், ஐஐடி சென்னையின் தையூரில் உள்ள டிஸ்கவரி வளாகத்தை பார்வையிட்டனர். சமீபத்தில் உலகில் முதல்முறையாக முப்பரிமான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இன்ஜின் கொண்ட ராக்கெட்டான அக்னிபானை ஏவிய புத்தாக்க நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், இ பிளேன் கம்பெனி ஆகியவற்றையும் பார்வையிட்டனர். விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோவுடன், ஆஸ்திரேலியாவின் ஏஎஸ்ஏவும் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE