இருமல், சளி, தொண்டை வலி, காய்ச்சலுடன் சென்னையில் பரவும் சுவாசப்பாதை தொற்றுகள்: குழந்தைகள், முதியவர்கள் பாதிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுவாசப்பாதை தொற்றுகளின் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இருமல், சளி, தொண்டை வலி, சில நேரங்களில் அதீத காய்ச்சலுடன் கூடிய இன்புளுயன்சா வைரஸ் தொற்றுகளால் குழந்தைகள், முதியவர்கள், இணைநோய் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தொற்றுகளின் பாதிப்புகளுக்கு புறநோயாளிகள் பிரிவுகளில் சிகிச்சை பெற்று செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது: எச்1என்1, எச்3என்2 (H1N1 and H3N2) இன்புளுயன்சா வைரஸ் தொற்றுகள் குளிர் மற்றும் மழை காலங்களில் அதிகமாக பரவக் கூடியது. கோடைகாலமான மே மாதத்தில் இருக்கும் அதிகமான வெப்ப நிலை, இந்த செப்டம்பர் மாதத்தில் உள்ளது. ஆனாலும், இன்புளுயன்சா வைரஸ் தொற்றுகள் பரவி வருகிறது. இதற்கு காலநிலை மாற்றமே காரணம்.

4, 5 நாட்கள் கடுமையான இருமல், தொண்டை வலி, உடல் வலியுடன் மருத்துவமனைகளுக்கு பலர் வருகின்றனர். அவர்களை பரிசோதனை செய்ததில், 10 பேரில் 7 அல்லது 8 நபர்களுக்கு நுரையீரல் சார்ந்த சுவாசப்பாதை தொற்று பாதிப்புள்ளது. ஒருவாரத்தில் பிரச்சினைகள் சரியாகிவிடுகிறது. சிலருக்கு மட்டும் 2 வாரம் முதல் 6 வாரம் வரை கடுமையான இருமல் பிரச்சினை நீடிக்கிறது.

குழந்தைகளுக்கு 103, 104 டிகிரி பாரன்ஹீட் வரை உடல் வெப்பநிலை (காய்ச்சல்) உள்ளது. நுரையீரல் சார்ந்த தொற்றுகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டவர் வீட்டில் இருந்தால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க அவரை தனிமைப்படுத்த வேண்டும்.

தொற்றுகள் வேகமாக பரவக்கூடியது என்பதால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். காய்ச்சிய நீரை பருக வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், மாத்திரை, மருந்துகளை எடுத்து கொள்ளக்கூடாது. கரோனா காலத்தில் கடைபிடித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இன்புளுயன்சா வைரஸ் தொற்றுகள் பரவி வரும் நிலையில் மற்றொருபுறம் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. தினமும் 100-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், டெங்குவின் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதனால், சுகாதாரத்துறை பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் போதியளவில் கையிருப்பில் வைத்திருக்கும்படியும், படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் மருத்துவமனைகளை பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE