சென்னை - ஆதம்பாக்கத்தில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை!

By ம.மகாராஜன்

தெரு நாய்கள் தொல்லை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி தரப்பில் இருந்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் கூட நடை பாதைகள், பூங்காக்கள், கடற்கரை பகுதிகள், தெருக்கள் என பல்வேறு இடங்களில் தெரு நாய் தொல்லை தொடர்கிறது.

இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கம் தலைமை செயலக குடியிருப்பு பகுதி பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஒன்றுஇயங்கி வருகிறது. இந்த பள்ளியில், அந்த பகுதியை சுற்றியுள்ள ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இதையொட்டி தினமும் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காகவும், அழைத்து செல்வதற்காகவும் டெலிபோன் காலனி -1,டெலிபோன் காலனி -2 மற்றும் என்.ஜி.ஓ காலனி ஆகிய பகுதிகள் வழியாக சென்று வருவது வழக்கம்.

இந்த பகுதிகளில் தற்போது ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. தெரு முடியும் இடங்களில் 3-க்கும் மேற்பட்டநாய்கள் ஒன்று கூடி காவல் காப்பதுபோல அணிவகுத்து நிற்கின்றன. இதனால் தினமும்இவ்வழியாக குழந்தைகளுடன் பள்ளிக்கு சென்று வரும் பெற்றோர் இந்த தெருநாய்கள் தங்களது குழந்தைகளை கடித்துவிடுமோ என்ற அச்சத்திலேயே அந்த பகுதியை கடந்துசென்று வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆதம்பாக்கத்தை சேர்ந்த லதா என்பவர் கூறும்போது, “தலைமை செயலக குடியிருப்பு பிரதான சாலை, என்.ஜி.ஓ காலனி வழியாக காலை, மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களில் சென்று வருவது வழக்கம். தற்போது அந்த தெருக்களில் ஆங்காங்கே தெருநாய்கள் நின்று கொண்டு சண்டையிட்டு கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் நம்மை முறைத்துக் கொண்டு நிற்பது போலவும் தோன்றும்.

அவற்றுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது நம்மிடம் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. மேலும் குழந்தைகளுடன் செல்லும்போது மிகுந்த அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. தினமும் பயத்துடனேயே சென்று வரவேண்டியுள்ளது சங்கடத்தை ஏற்படுத்துகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி கூறுகையில், “தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்துவிட்டாலும், அதன் தொல்லைகுறைவதாக இல்லை. ஆனால் தெருநாய்களை கட்டுப்படுத்த அவ்வப்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் ஆதம்பாக்கம் என்.ஜி.ஓகாலனி, டெலிபோன் காலனி பகுதிகளில்சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க, புகார்பெறப்பட்டதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE