மதுராந்தகம் ஏரியில் 3 ஆண்டுகளாக நடக்கும் சீரமைப்பு பணி - விவசாயிகள் வேதனை

By கோ.கார்த்திக்

மதுராந்தகம் ஏரியில் ரூ.120 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. எனினும், ஏரியில் தூர்வாரமல் கரைகளை உயர்த்தி மதகுகள் அமைக்கும் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், 3 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி அமைந்துள்ளது. சுமார் 4,752 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில் 2,411 ஏக்கர் நீர் பிடிப்பு பரப்பாகவும், 932.49 ச.கி.மீ., நீர்வரத்து பகுதிகளாகவும் உள்ளன. ஏரியின் கரையின் மொத்த நீளம் 3,950 மீட்டராக உள்ளது. ஏரியின் முழு கொள்ளளவான 24.30 அடி வரையில் தண்ணீர் சேமிக்க முடியும் என்ற நிலை உள்ளது. மேலும், ஏரியின் நீரை நம்பி மதுராந்தகம் வட்டத்தில் உள்ள கடப்பேரி, கத்திரிச்சேரி, மதுராந்தகம், வளர்பிறை, முள்ளி, முன்னூத்திக்குப்பம், விளாகம், முருக்கஞ்சேரி, விழுதமங்கலம் உட்பட 36 கிராமங்களில் மொத்தம் 2,853 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதிபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஏரியில் வண்டல் மண் படிந்துதூர்ந்துள்ளதால், ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது. இதன்பேரில், தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு ரூ.120 கோடி நிதி ஒதுக்கியது. ஏரியில் தூர்வாரும்பணிகளை பாலாறு கீழ்வடி நிலக்கோட்டம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, கலங்களை உடைத்து ஏரியிலிருந்த நீர் வெளியேற்றப்பட்டது. மேலும், தூர்வாரும் பணிகள் நிறைவடைந்து மீண்டும் நீரை சேமிக்கும் வரையில், பாசனத்துக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், 3 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏரியில் கதவணை அமைக்கும் பணிகள் உள்பட சீரமைப்பு பணிகள் 75 சதவிதம் நிறைவடைந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனல், ஏரியை தூர்வாரவில்லை என விவசாயிகளின் வேதனை தெரிவித்துள்ளனர்.

வெங்கடேசன்

இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட விவசாய நலச்சங்க தலைவர் வெங்கடேசன் கூறியதாவது: ஏரியில் நடைபெற்று வரும் பணிகளால், பாசனத்துக்கு தண்ணீரின்றி 2,853 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், 30-க்கும்மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரியில் கடந்த 3 ஆண்டாக நீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில், குறிப்பிட வேண்டிய செய்தி என்னவென்றால் ஏரி தூர்வாரி சீரமைக்கப்படும் என நீர்வளத்துறையினர் கூறிய நிலையில், ஏரியில் ஒரு அடி மண்கூட தூர்வாரப்படவில்லை. மாறாக ஏரியின் கரையை மட்டுமே உயர்த்தும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதுதவிர, ஏரியில் ஒருசில பகுதிகளில் தேங்கியிருந்த ஓடை மண்ணை வாரியுள்ளனர். இவ்வாறு வாரப்பட்ட மண் என்ன செய்யப்பட்டது என்பது போன்ற தகவல்கள் இல்லை. ஏரியின்அருகேயுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களின் நிலங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை ஏரியில் வாரிக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தால், 50 சதவீதம் ஏரி தூர்வாரப்பட்டு கூடுதலாக தண்ணீர் தேக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். விவசாயிகளும் பலனடைந்திருப்பார்கள். நீர்வளத்துறையினர், ஏரியில் பணிகள் தொடங்கும் முன்பு சீரமைப்பு பணிகள் குறித்து விவசாயிகளிடம் ஆலோசனை கேட்கவில்லை. விவசாயிகளை ஒருங்கிணைத்து பணிகள் குறித்து விளக்கவுமில்லை. இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய பதில் வழங்கப்படவில்லை.

இதனால், விவசாயிகள் 3 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடி தடைக்காலத்தின்போது மீனவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கும் அரசு,ஏரியின் பணிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முன்வராமல் வஞ்சித்து வருகிறது. அதனால், தமிழக முதல்வர்ஏரியின் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் என 3 ஆண்டுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து, மதுராந்தகம் நீர்வளத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: மதுராந்தகம் ஏரியில் கூடுதலாக நீரை சேமிக்கும் வகையிலும், வெள்ளப் பெருக்கின்போது அதிகளவிலான தண்ணீரை பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில், 144 மீட்டர் நீளத்துக்கு 12 ஷெட்டர்களுடன் கூடிய மதகுகள் மற்றும் ஷெட்டர்களை திறந்து மூடுவதற்காக நவீன மோட்டார்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது, கட்டுமான பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனால், வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பணிகள் முழுமையாக நிறைவுபெறும் என கருதுகிறோம். மேலும், நடப்பாண்டு விவசாய தேவைக்கு தண்ணீர் சேமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், நிலத்தடி நீர்மட்டமும் மேம்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE