சென்னை: மாணவர்கள் கிட்டத்தட்ட தங்களுக்கு இணையான எடை கொண்ட புத்தகப் பைகளை சுமந்து சொல்லும் கொடுமைக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். அதேபோல், பள்ளிக்கூடங்களில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகள் தரைத்தளத்திலேயே இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டின் தேவை மாநிலக் கல்விக் கொள்கையா, தேசியக் கல்விக் கொள்கையா? என்பது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மாணவர்களை வருத்தாத கல்வி முறை தேவை என்ற சிந்தனை கொள்கைவகுப்பாளர்களிடம் இதுவரை எழவில்லை என்பது வேதனையளிக்கிறது. பாடச்சுமை மிகுந்த கல்வி தான் தரமான கல்வி என்ற தோற்றத்தை ஏற்படுத்த அரசே துணை போவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் நான் நீக்கமற காணும் காட்சி பள்ளிகளில் பயிலும் இளம்தளிர்கள், அரிசி மூட்டைக்கு இணையான எடை கொண்ட புத்தகப் பைகளை சுமந்து செல்வது தான். சுமை தூக்கும் தொழிலாளர்களைப் போல புத்தகப் பைகளை சுமந்து செல்லும் குழந்தைகள் காலப் போக்கில் முதுகுத் தண்டு வளைந்து கூன் விழுந்தவர்களைப் போல மாறி விடுகின்றனர்.
தமிழ்நாட்டின் எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும், எந்தத் தெருவை எடுத்துக் கொண்டாலும் அங்கு இத்தகைய மாணவர்கள் சிலரை பார்க்க முடியும். பல்வேறு இடங்களில் பள்ளிக்குழந்தைகள் பலரை நானே அழைத்து விசாரித்த போது, அவர்கள் புத்தகப் பைகளை சுமந்து செல்வதை தண்டனையாக கருதுவதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
» சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி: அஸ்வின் அபாரம்!
» இலங்கை அதிபர் தேர்தல் - தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திசநாயக்க முன்னிலை
குழந்தைகளின் இந்த நிலைமைக்கு காரணம் பெற்றோர்களின் அறியாமையும், தனியார் பள்ளிகளின் பேராசையும் தான். எந்தப் பள்ளிகள் ஆங்கிலத்தில் கல்வி வழங்குகின்றனவோ, எந்தப் பள்ளிகளில் பாடச் சுமை அதிகமாக உள்ளதோ, அந்தப் பள்ளி தான் சிறந்த பள்ளி என்ற மாயை தமிழ்நாட்டில் உருவாக்கப் பட்டுள்ளது. இதை உருவாக்கியவை தனியார் பள்ளிகள். அந்த மாயையை நம்பி பல பத்தாண்டுகளாக ஏமாந்து கொண்டிருப்பவர்கள் பெற்றோர்கள்.
பள்ளிக் கூடத்தில் சேர்த்தவுடனேயே தங்கள் பிள்ளைகள் அரைகுறையாகவாவது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள், கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கின்றனர். தனியார் பள்ளிகளும் இதை பயன்படுத்திக் கொண்டு ஆங்கிலக் கல்வி, அதிக புத்தகங்கள் என ஆசைக் காட்டி குழந்தைகளை புத்தக பொதி சுமக்க வைக்கின்றன.
அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி வழங்கப்பட வேண்டும். அது சுகமான, சுமையற்ற, விளையாட்டுடன் கூடிய, தரமான, கட்டணமில்லாத, கட்டாயக் கல்வியாக இருக்க வேண்டும் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. அதற்காகத் தான் பல ஆண்டுகள் போராடி சமச்சீர்கல்வி முறையை அறிமுகம் செய்ய வைத்தேன். பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்த அரசியல் அழுத்தம் காரணமாக சமச்சீர்கல்வி ஏட்டளவில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கூட, இன்னும் நடைமுறையில் சாத்தியமாகவில்லை.
சமச்சீர்கல்வி முறை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக தமிழ்நாட்டில் மாநிலப் பாடத் திட்டம், மெட்ரிக் பாடத் திட்டம், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம், ஓரியண்டல் பாடத் திட்டம் என 4 வகை பாடத்திட்டங்கள் இருந்தன. மாநிலப் பாடத்திட்டத்தை விட மெட்ரிக் பாடத்திட்டம் தான் சிறந்தது என்ற மாயை உருவாக்கப்பட்டு இருந்ததால் தான் அதை தகர்ப்பதற்காக சமச்சீர்பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி அனைத்து பள்ளிகளும் ஒரே கல்வித்திட்டத்தின் கீழும், ஒரே கல்வி வாரியத்தின் கீழும் கொண்டு வரப்பட வேண்டும்.
ஆனால், அனைத்துப் பள்ளிகளும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டாலும், ஒரே வாரியத்தின் கீழ் கொண்டு வரப்படவில்லை. மெட்ரிக் பள்ளிகளுக்கு தனி வாரியம் இன்னும் தொடர்கிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அதன் பெயர் மெட்ரிக் பள்ளிகள் வாரியம் என்பதிலிருந்து, தனியார் பள்ளிகள் வாரியம் என்று மாற்றப்பட்டு விட்டது.
ஆனால், மெட்ரிக் என்ற சொல் தான் பெற்றோர்களை கவர்ந்து இழுக்கும் என்பதால், அதை பெயரிலிருந்து அகற்ற தனியார் பள்ளிகள் மறுக்கின்றன. மேலும், அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களை விட கூடுதல் பாடங்களை கற்பித்தால் தான் அதிக கட்டணம் வசூலிக்க முடியும் என்பதால், அனைத்து தனியார் பள்ளிகளும் அனுமதிக்கப்பட்ட பாடங்களைத் தவிர கூடுதல் பாடங்களைக் கற்பிப்பதாகக் கூறி, அதற்கென தனி புத்தகங்களை வாங்கும்படி மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றன. தனியார் பள்ளிகளின் இந்த பேராசை காரணமாகத் தான் குழந்தைகள் அதிக சுமையை சுமக்க நேரிடுகிறது.
அதிக எடை கொண்ட புத்தகப் பைகளை விட கொடுமை, அவற்றை சுமந்து கொண்டு 3 மாடிகள் அல்லது 4 மாடிகள் ஏற வேண்டியிருப்பது ஆகும். மலர்களைப் போல கையாளப்பட வேண்டிய மழலைகள், இவ்வளவு அதிக எடை கொண்ட புத்தகப் பைகளை சுமந்து செல்ல வேண்டியிருப்பதால், பள்ளிக்கு சென்று வந்த பின்னர் முதுகு வலி, உடல் வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் அவர்களால் பள்ளிகளில் நடத்தப்பட்ட அன்றைய பாடங்களை படிப்பதோ, வீட்டுப்பாடம் செய்வதோ சாத்தியமாவதில்லை.
மாணவர்கள் கிட்டத்தட்ட தங்களுக்கு இணையான எடை கொண்ட புத்தகப் பைகளை சுமந்து சொல்லும் கொடுமைக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான, ஒரே எண்ணிக்கையிலான பாடநூல்கள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். மாணவர்கள் தங்களின் பாடநூல்களை பள்ளியிலேயே வைத்து செல்லவும், வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை ஏடுகளில் குறிப்பெடுத்துச் சென்று அதைக் கொண்டு படிக்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அது தான் மாணவர்கள் பாடங்களை புரிந்து கொண்டு படிப்பதற்கு வகை செய்யும். கூடுதலாக வாரத்திற்கு ஒரு நூலை நூலகத்தில் இருந்து எடுத்துச் சென்று அதில் உள்ள விவரங்களை அறிந்து பொது அறிவை வளர்த்துக் கொள்ள வகை செய்ய வேண்டும்.
அதேபோல், பள்ளிக்கூடங்களில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகள் தரைத்தளத்திலேயே இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். தொழிற்கல்வியும், விளையாட்டுக் கல்வியும் கட்டாயமாக்கப்பட வேண்டும். வாரத்திற்கு இரு பாடவேளைகள் நீதிபோதனை வகுப்புகளும் கட்டாயமாக்கப்பட வேண்டும். இத்தகைய சீர்திருத்தங்களின் மூலம் பள்ளிக்கு செல்வதை மழலைகளுக்கு இனிமையான அனுபவமாக மாற்றும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கையை தமிழக அரசு இறுதி செய்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago