புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது: தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மேற்கு வங்கத்தை ஒட்டி நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட 2 நாட்கள் முன்னதாக கடந்த மே 30-ம்தேதி கேரளாவில் தொடங்கியது. பின்னர் படிப்படியாக முன்னேறி மிக தாமதமாக வட மாநிலங்களில் ஜூலை 2-வது வாரத்தில் தீவிரமடைந்தது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில், பருவமழை தற்போது முடிவுக்கு வரவுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் நாளை (செப்.23) தென்மேற்கு பருவமழை விலக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு வங்கத்தை ஒட்டி நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழக வானிலை குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 24-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூரில் 17 செ.மீ, செங்கல்பட்டுமாவட்டம் தாம்பரத்தில் 6 செ.மீ,விஐடி (கேளம்பாக்கம்), பெரும்புதூரில், 5 செ.மீ, சென்னைஅண்ணா பல்கலைக்கழகம், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 25-ம் தேதி வரை மணிக்கு அதிகபட்சமாக 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE