வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலகத்தில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்கூட்டியே அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களை முருகானந்தம் அறிவுறுத்தினார்.

மேலும் அவர் கூறியதாவது: மண்டல அளவிலான பல்துறை ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டங்களை நடத்த வேண்டும். குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பேரிடர் குறித்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். சென்னையில் நெடுஞ்சாலை, நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி, மெட்ரோ ரயில் மூலம் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். புதிய பணிகளுக்காக சாலைகளைத் தோண்டக்கூடாது. ஏற்கெனவே சாலைகளில் தோண்டிய பள்ளங்களை விரைவாக மூட வேண்டும்.

வருவாய்த் துறை, காவல்துறை, மீன்வளத் துறையை பேரிடர் மீட்பு மற்றும் எச்சரிக்கை பணிகளுக்குத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் மீட்பு உபகரணங்கள், வாகனங்கள், நீர் இறைப்பான்கள், படகுகளை பருவமழை தொடங்கும் முன்பே தாழ்வான பகுதிகளில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைப் பின்பற்றி, மழைதொடங்குவதற்கு முன்பாக மாநிலத்தில் அதிக பாதிப்புகளுக்குள்ளாகும் பகுதிகளில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை நிலைநிறுத்த வேண்டும். பொதுமக்களுக்குப் புரியும்படி பகுதி வாரியான வானிலை தகவல்களை வழங்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE