திருப்பதி லட்டு விவகாரம்: செப்.28-ல் சூரைத்தேங்காய் உடைப்பு போராட்டம் - இந்து முன்னணி அழைப்பு

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பதி லட்டு விவகாரத்தை ஒட்டி, வரும் 28-ம் தேதி ஆஞ்சநேயர் கோயில்களில் சூரைத்தேங்காய் உடைத்து போராட்டம் நடத்த இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் இன்று (செப். 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தை பக்தர்கள் உயிரினும் மேலான விஷயமாக கருதுகின்றனர். திருப்பதி செல்லும் ஒவ்வொரு பக்தர்களும் பிரசாதமாக வாங்கிய லட்டுகளை பூஜை அறையில் வைத்து, பூஜித்து தங்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்வர். இத்தகைய புனிதமிகு பிரசாதமானது கோயில் மடைப்பள்ளி நடைமுறைகளின்படி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரிக்கப்படவேண்டிய நிலையில், கோடானு கோடி இந்துக்களின் நம்பிக்கையை உடைக்கும் விதமாக திருப்பதி கோயிலில் விலங்கு கொழுப்பு கலந்த லட்டு பிரசாதமாக வழங்கியிருப்பது அனைத்து இந்துக்களுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியதோடு, நம்பிக்கையையும் சிதைத்துள்ளது. ஆய்வக பரிசோதனையில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் புனிதமாக கருதும் பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலந்தது பற்றி கடவுளிடம் முறையிடுவோம். திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களும், பொதுமக்களும் புரட்டாசி 2-வது சனிக்கிழமையான ஏகாதசி தினமான வரும் 28-ம் தேதி ஆஞ்சநேயர் கோயில் எங்கெல்லோம் உள்ளதோ, அங்கெல்லாம் ஒரு தேங்காய் எடுத்துக் கொண்டு, அங்குள்ள அனுமனையும், கருடனையும் மனதார வழிபட்டு இந்துக்களின் புனிதம் கெடுத்த, இந்த அநியாயத்தில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்றும், தொடர்ந்து இந்து கோயில்களில் நடக்கும் ஆகம விதிகள் மீறல் உள்ளிட்டவை தொடர்பாக சூரைத் தேங்காய் உடைத்து வழிபடுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE