திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நிறுவனத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: திருப்பதி லட்டு பிரசாத தயாரிப்புக்காக நெய் அனுப்பிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் என்ற பால் நிறுவனத்தில் 7 மணி நேரத்துக்கு மேலாக மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு கலந்திருப்பது ஆய்வக பரிசோதனையில் தெரிய வந்தது. திருப்பதி லட்டுக்கு நெய் வழங்கிய 5 நிறுவனங்களில் ஒரு நிறுவனமான திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் என்ற பால் நிறுவனம், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக நெய் அனுப்பி வந்துள்ளது. நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையையும் தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டது. அதில் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் மூலம் திருப்பதிக்கு அனுப்பிய நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருக்கிறது. அதில் சோயா பீன்ஸில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருப்பதிக்கு நெய் அனுப்பிய ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம், "எங்கள் தயாரிப்பில் எந்த குறைபாடும் இல்லை. எந்தப் பரிசோதனைக்கும் நாங்கள் தயார்" என்று அறிவித்தது. இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று (செப்.20) அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினர். தொடர்ந்து அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை மாதிரி எடுத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவி தலைமையிலான அதிகாரிகள் இன்று (செப்.21) காலை 9.30 மணிக்கு அந்த நிறுவனத்துக்கு வந்தனர். பின்னர், அந்த நிறுவனத்தில் உள்ள நெய் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் இடங்களை பார்வையிட்டு சோதனை நடத்தினர். குறிப்பாக பாலில் இருந்து எவ்வாறு நெய் பிரித்து எடுக்கப்படுகிறது. அதனுடன் வேறு பொருட்கள் எதுவும் கலக்கப்படுகிறதா என்று நிறுவன அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், அங்கு தயாரிக்கப்பட்ட நெய் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகளையும் சேகரித்தனர். பால் உள்ளிட்ட பொருட்களின் மாதிரிகளை பகுப்பாய்வுக்காக எடுத்தனர். ஏழு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது.

பின்னணி விவரம்: ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு, மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் 5 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளது. இதில் ஒரு நிறுவனமான திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக நெய் அனுப்பி வந்துள்ளது. இதனால், லட்டு தரம் மிகவும் குறைந்து போனது. இது குறித்து பக்தர்கள் தொடர்ந்து புகார் கூறிவந்தாலும், கடந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதன் தொடர்ச்சியாக, ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனார். இதைத் தொடர்ந்து, திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறித்த புகாரை அவரது பார்வைக்கு தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள் ராவ் கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து பரிசோதனை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்ட நிலையில், குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த ஆய்வு முடிவில், நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், லட்டு பிரசாதம் தயாரிக்கும் நெய்யில் ஜெகன் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து முழு விளக்க அறிக்கையை உடனடியாக வழங்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். ஏழுமலையான் கோயிலின் புனிதத்தை காக்கும் விஷயத்தில், ஆகம, வைதிக, தார்மீக அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE