வேலூர்: பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.70 கோடியில் கட்டிய புதிய தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை மர்ம நபர்கள் திறந்துவிட்டுள்ளனர். இதையடுத்து, காலியான அணையை திறந்துவைத்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “தண்ணீரை திறந்தவர்கள் 15 நாட்களில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள்,” என்று கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் குகையநல்லூர் கிராமத்தில் பொன்னை ஆற்றின் குறுக்கே நீர்வளத்துறை சார்பில் ரூ.12.70 கோடி மதிப்பில் புதிதாக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. 270 மீட்டர் நீளமும், 1.50 மீட்டர் உயரம் கொண்டதாக இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணையின் நீர்மட்ட அளவின்படி ஆற்றில் 750 மீட்டர் நீளத்துக்கு தண்ணீர் தேங்கும்படியும், 5.36 மி.க.அடி கொள்ளளவுக்கு நீரை தேக்கிவைக்க முடியும். இதன்மூலம், பொன்னை ஆற்றின் இரண்டு பக்கமும் 2 கி.மீ. சுற்றளவில் உள்ள குகையநல்லூர், தக்காம்பாளையம், ஏகாம்பரநல்லூர், மருதம்பாக்கம், வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், ராமகிருஷ்ணாபுரம், சிவானூர், மேல்பாடி, தேன்பள்ளி ஆகிய 10 கிராமங்களின் நிலத்தடிநீர் செறிவூட்டப்பட்டு 40 கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் 716 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதனால், நேரடியாகவும், மறைமுகமாகவும் 420 விவசாயிகள், 4 ஆயிரத்து 500 பொதுமக்கள் பயன்பெற முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய தடுப்பணையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (செப்.21) திறந்து வைத்து பேசும்போது, “குகையநல்லூர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்காகவும், விவசாய பயன்பாட்டுக்காக இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பனையை திறக்கும் முன்பாக இங்கு தண்ணீரை தேக்கி வைக்க கூறியிருந்தேன்.
அணையின் கதவுக்கு நாங்கள் பூட்டு போடவில்லை. ஆனால், யாரோ தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். தண்ணீரை திறந்தவர்கள் 15 நாட்களுக்குள் கைது செய்து சிறைக்கு அனுப்பப்படுவார்கள். மாவட்ட ஆட்சியர் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு இடத்தில் எடுத்தால் இதுபோல நடவடிக்கை எடுத்தால்தான் மற்ற இடங்களில் பயம் வரும்.தற்போது, கட்டியுள்ள தடுப்பணை அதிக வெள்ளம் வரும்போது பலமாக நின்றால் நன்றாக கட்டி உள்ளதாக அர்த்தம். உடைந்து போனால் இதனை கட்டியவர்கள் சிறைக்கு செல்ல நேரிடும். எனக்கு, தெரிந்த ஒரே வழி தப்பு செய்தால் சிறைக்கு சென்றாக வேண்டும்.
» போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ், ஊதிய ஒப்பந்தம் - ஒரே நேரத்தில் பேச்சு நடத்த கோரிக்கை
» அரசு பள்ளி ஆசிரியருக்கு அவமதிப்பு: விருதுநகர் ஆட்சியருக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்
வேலூர் மாவட்டத்தில் மட்டும் பரமசாத்து - பொன்னை இடையேயும், குகையநல்லூர், அரும்பருத்தி, தண்டலகிருஷ்ணாபுரம், காவனூர், குடியாத்தம், வாணியம்பாடி அருகே தடுப்பணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பாலாறு, பொன்னையாறு போன்ற ஆறுகளின் குறுக்கே பல தடுப்பணைகள் அரசின் மூலம் கட்டப்பட்டுள்ளது. இவற்றை பாதுகாக்க வேண்டியது மக்களின் பொறுப்பு. குடியாத்தம் பகுதியில் ரூ.100 கோடி செலவில் மோர்தானா அணை கட்டப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாகிறது. இன்னும் பல ஆண்டுகளுக்கு மக்களுக்கு பயன்படும். அதேபோல், ராஜா தோப்பு அணையும், ஆண்டியப்பனூர் அணையும் நல்ல அஸ்திவாரத்துடன் பலமான அணைகளாக கட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்துவது ஓட்டுக்காக அல்ல. காலம் கடந்து மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காகும்
தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் தேவையான திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள வாலாஜா பாலாறு அணைக்கட்டு 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த அணை பழுதுபார்த்து சீரமைக்க வேண்டிய நிலையில் உள்ளது. நீர்வளத்துறை சார்பில் மாநில முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் தேவையான திட்டங்களை எவ்வித பாகுபாடின்றி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறேன்,” என்றார்.
இந்த நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, வேலூர் மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த், மாநகராட்சி துணைமேயர் எம்.சுனில்குமார், மேல்பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆர்.ரமேஷ், செயற்பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago