மநீம தலைவராக மீண்டும் கமல்ஹாசன் தேர்வு: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மீண்டும் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார். மேலும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அழகான மாளிகையை சிதைத்துவிட்டு குட்டிச் சுவரைக் கட்டிப்பார்க்கும் முட்டாள்தனமான முடிவு. மத்திய அரசின் இந்த முடிவை வன்மையாக கண்டிப்பது உட்பட 16 தீர்மானங்கள் மநீம பொதுக்கூழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் இன்று (செப்.21) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு, மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பொறுப்பை கமல்ஹாசன் மீண்டும் ஏற்று, இந்த இயக்கத்தை வழிநடத்த வேண்டும். கட்சியை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் அடுத்தாண்டு ஜூன் 25-ம் தேதிக்குள் குறைந்தது 5,000 புதிய உறுப்பினர்களைச் சேர்க்க உறுப்பினர்ச் சேர்க்கை முகாம்களை நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு, தலா ஒரு பூத்துக்கு குறைந்த பட்சம் 5 பேர் நியமிக்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிவருகின்றன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மநீம ஒரு குழுவை உருவாக்கி விரிவான ஆய்வுகள் செய்து அதன் அறிக்கையை, பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு சமர்ப்பிப்பதோடு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுக்க அழுத்தம் கொடுக்கும். போதைப்பொருட்களுக்கு எதிராக தமிழக அரசும், காவல்துறையும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு மநீம பொதுக்குழு பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

மத்திய அரசு சாதி வாரியான கணக்கெடுப்பை இந்தியா முழுவதிலும் உடனடியாக துவங்கப்பட வேண்டும். தமிழகத்துக்கு உரிய நிதிப்பகிர்வை அரசியலாக்கி, விவாதப்பொருளாக்கி தமிழக மக்களைத் தண்டிக்கும் போக்கை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தவாறு, சராசரி உற்பத்திச் செலவுடன், 50 சதவீத லாபத்தை அளிக்கும் வகையில் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உடனடியாக மத்திய அரசு சட்டப்பூர்வமாக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நிகழ்த்தும் கொடூர தாக்குதல்களையும், அத்துமீறல்களையும் மநீம வன்மையாகக் கண்டிக்கிறது. ஏற்கனவே சிறைபட்டிருக்கும் தமிழக மீனவர்களையும், அவர்களது உடைமைகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதற்கேற்றபடி இரு நாடுகளிடையே புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும். பங்கேற்பு ஜனநாயகத்தை உறுதி செய்யும் கிராம சபை, ஏரியா சபை ஆகியவற்றை மேலும் வலிமைப்படுத்த வேண்டும்.

மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை உருவாக்குவது, தங்களது மாநிலங்களின் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்க்கும் சூழலில், ஒருமித்த கருத்தின்றி மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கக்
கூடாது.

ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மாண்புமிக்க ஜனநாயகத்தை மண் கொண்டு புதைக்கும் செயல். ஒரே நாடு ஒரே தேர்தல். அழகான மாளிகையை சிதைத்துவிட்டு குட்டிச் சுவரைக் கட்டிப்பார்க்கும் முட்டாள்தனமான முடிவுதான் இது. மத்திய அரசின் இந்த முடிவை மநீம வன்மையாக கண்டிக்கிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21-ஆக குறைக்க மத்திய அரசு உரிய சட்டதிருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

அரசின் நலத்திட்டங்கள் நலிவடைந்த மக்களை நேரடியாகச் சென்று அடையும்படி ‘அனைவருக்குமான அடிப்படை வருமான அட்டை (Universal Basic Income Card) நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE