பென்னி குவிக்கின் ‘நீர் அவதாரம்’ - பெரியாறு அணை அஸ்திவார பணி தொடங்கிய நாள் இன்று!

By செய்திப்பிரிவு

கூடலூர்: 18-ம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் பல ஆறுகள் வறண்டதால் பஞ்சம், பட்டினி அதிகரித்தது. இதற்காக வட மேற்கு திசையில் சென்று அரபிக்கடலில் கலந்த முல்லைப் பெரியாற்றில் அணை கட்ட முடிவு செய்யப்பட்டது.

இப்பொறுப்பு ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் வசம் 1882-ல் பிரிட்டிஷ் அரசு ஒப்படைத்தது. கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அடர்ந்த காடு, வன விலங்குகள், அதீத மழை பொழிவு உள்ளிட்டவை பெரும் சவாலாக இருந்தது.

இந்நிலையில் 1887-ம் ஆண்டு செப்டம்பர் 21-ல் பெரியாறு அணை அடித்தள பணிக்கான முதல் கல்லை ஊன்றினார் ஆங்கில பொறியாளரான பென்னி குவிக். இதையடுத்து அணைக்கான வேலைகள் தொடங்கின.

இருப்பினும், கட்டப்பட்ட அடித்தளப் பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதை யடுத்து அணை கட்டும் பணியைத் தொடர வேண்டாம் என்று அப் போதைய ஆங்கிலேய அரசு உத்தரவிட்டது.

இருப்பினும் இங்கிலாந்து சென்ற பென்னிகுவிக் தனது சொத்தின் பெரும் பகுதியை விற்று பணம் திரட்டினார். பின்னர் கோடைகாலத்தின் தொடக்கத்தில் மீண்டும் அடித் தளத்தை வடிவமைத்தார். இப்போது கன மழையால் கட்டுமானம் பாதிக்கவில்லை. அதன் பிறகே, அணை கட்ட சென்னை மாகாணம் பென்னிகுவிக்குக்கு துணை நின்றது.

இந்திய பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் பதவிக்கு வந்த முதல் இந்தியரான ஏ.வி. ராமலிங்க அய்யர், மற்றொரு பொறியாளரான எ.டி. மெக்கன்சி ஆகியோர் பென்னிகுவிக்குடன் இணைந்து பணியாற்றினர். எ.டி.மெக்கன்சி எழுதிய ‘ஹிஸ்டரி ஆப் தி பெரியாறு ரிவர் ப்ராஜெக்ட்’ என்னும் நூலில் அணை கட்டிய போது பென்னிகுவிக்குக்கு ஏற்பட்ட இதுபோன்ற விவரங் களை கூறியுள்ளார். அதில், மணலும் சுண்ணாம்பும் கலந்து சுருக்கிகளை உருவாக்கி சிறு சூளைகளில் வைத்து சுட் டெடுத்தது, கருங்கல்லை 6 அங்குல கனத்தில் உடைத்து அடுக்கி சுருக்கி கலவையால் கட்டப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

அப்போதே 5 ஆயிரம் தொழிலாளர்கள் தொடர்ந்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு சிரமங் களுக்கு மத்தியில் 1895-ல் அணை கட்டி முடிக்கப்பட்டது. அப்போதைய மதிப்பீடு ரூ.81.30 லட்சம் ஆகும். சென்னை மாகாண ஆளுநர் வென்லாக் பிரபு தலைமையில் 1895 அக்.10-ம் நாள் அணை அதிகாரப் பூர்வமாக திறக்கப்பட்டது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை வளமாக்கிய பெரியாறு அணையை நிர்மானிக்க அடித்தளம் இட்ட நாள் இன்று. அந்நிய மண்ணில் பிறந்தாலும் ‘வந்த இடத்தில்’ வறண்டு கிடந்த பூமியை வளம் பெறச் செய்த பென்னிகுவிக் இன்றைக்கும் மாமனிதனாகவே மக்களின் மனதில் வாழ்ந்து வருகிறார். நீருக்காக இவர் எடுத்த அவதாரம் காலம் கடந்தும் பேசப் பட்டுக் கொண்டே இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE