சென்னையில் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி தொடங்கியது

By ம.மகாராஜன்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி தொடங்கியது.

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இன்று (செப்.21) தொடங்கியது. தொடர்ந்து அக்.6-ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தினந்தோறும் காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடத்தப்படும் கண்காட்சியில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களான பட்டு, பருத்தி ஆடைகள், மண்பாண்டப் பொருட்கள், தோல் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், விதவிதமான நவராத்திரி கொலு பொம்மைகள் உள்ளிட்டவை 48 அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்படும்.

இதுதவிர, பார்வையாளர்கள் பாரம்பரிய சுவை மிகுந்த சிறுதானிய உணவுகளை உண்டு களித்திடும் வகையில் உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வார இறுதி நாட்களில் பாரம்பரியமிக்க சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.இன்றைய கண்காட்சி தொடக்க நிகழ்வில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் ச.திவ்யதர்ஷினி, செயல் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE