உதகை தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.4 லட்சம் பறிமுதல்

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: உதகையில் உள்ள தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.4 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவமனை அருகில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நகர்ப்புற ஏழை மக்கள் மத்தியில் வலுவான அடிமட்ட அளவிலான கட்டமைப்புகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு வாழ்வாதார வசதிகளை மேம்படுத்தி அவர்களின் நிலையை மேம்படுத்துவதுடன், வறுமையை ஒழிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

குறிப்பாக, நகர்ப்புற தெரு வியாபாரிகள், மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் பணிகள் இந்த இயக்கத்தால் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்தின் பலன்கள், சரியான முறையில் சென்றடைவதை கண்காணிப்பதற்காக நகராட்சி ஆணையர் தலைமையிலான குழு செயல்படுகிறது.

அதன்படி உதகை நகராட்சி அலுவலகத்தில் சமுதாய ஒருங்கிணைப்பாளராக உள்ள யாமினி (56) என்பவர் இந்த அலுவலகத்தில் மகளிர் திட்ட பிரிவுக்கு கூடுதல் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திலுள்ள 35 மகளிர் குழுக்களுக்கு கூட்டுறவுத்துறை உதவியுடன் தலா ரூ.5 லட்சம் என ரூ.1.75 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டு நேற்று அவர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது. அதை அவர்கள் நேற்று வங்கியில் கொடுத்து பணமாக மாற்றிக் கொண்டனர்.

இந்நிலையில் மகளிர் குழுக்களுக்கு பணம் வழங்கியதற்காகவும், மீண்டும் இதுபோல் திட்டங்களில் கடன் வழங்குவதற்காகவும் கைமாறாக ஒவ்வொரு குழுவிடமும் இருந்து தலா ரூ. 42 ஆயிரத்தை யாமினி மற்றும் அதே அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பிரேமலதா ஆகியோர் வசூலித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, சுமார் 10 குழுக்களிடம் இருந்து இதுவரை ரூ.4 லட்சத்து 4 ஆயிரம் வசூலித்ததாக தெரிகிறது.

இது குறித்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி-யான ஜெயக்குமார், உதவி ஆய்வாளர் ரங்கநாதன் தலைமையிலான குழுவினர் உதகை நகப்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் திடீர் ஆய்வு நடத்தி கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 4 ஆயிரம் பணத்தை வெள்ளிக்கிழமை இரவு கைப்பற்றியுள்ளனர். மேலும், இதுகுறித்து யாமினி, பிரேமலதா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் ரூ.4 லட்சம் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE