தமிழகத்தில் விலங்கு கொழுப்பு கலந்த இனிப்புகள் தயாரிக்கப்படுவதில்லை: உணவு பாதுகாப்பு துறை தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: திருப்பதி லட்டில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் கலந்திருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கும் சூழலில், தமிழகத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த இனிப்புகள் எதுவும் தயாரிக்கப்படவில்லை என்று தமிழக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாட்டு எலும்புகளை உருக்கி, அதிலிருந்து தயாரிக்கப்படும் நெய்யைஉணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடாது. பாமோலின், விலங்குகளின் கொழுப்பு மூலம் தயாரிக்கப்பட்ட லட்டுகளின் சுவை, அசல் நெய்யில் செய்த லட்டின் சுவையில்இருந்து நிச்சயம் வேறுபட்டிருக்கும். அவற்றை நம்மால் சாப்பிட முடியாது. அதன் வாசனை, சாப்பிடும் முன்பே நமக்குத் தெரிந்துவிடும். மேலும், லட்டு போன்ற உணவுப் பொருட்களில் விலங்கு கொழுப்புகளை பயன்படுத்துவது என்பது மிகவும் சிரமமானது.

தமிழகத்தை பொருத்தவரை, சில இடங்களில் பாமோலின் (தாவரஎண்ணெய்) கலந்து தயாரிக்கப்பட்ட, தரம் குறைவான லட்டுகளை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். கலர் சாயங்களை சிலர் கலக்கின்றனர். ஆனால், விலங்கு கொழுப்புகளில் இருந்துபெறப்படும் நெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இனிப்புகள் தமிழகத்தில் இல்லை. இதையொட்டிய புகார்கள் எதுவும் பெறப்படவும் இல்லை. மேலும், உணவுபாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும்கூட எதுவும் உறுதிசெய்யப்படவில்லை.

விலங்கு கொழுப்புகள் கலந்துதயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை உட்கொண்டால் ரத்தக் குழாய் அடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பு, கண் பார்வை இழப்பு, நெஞ்சுவலி போன்றவை ஏற்படலாம். இன்றைய காலகட்டத்தில் தேவையில்லாத கொழுப்புகளை நாம் சாப்பிடும்போது, அவை செரிமானம் அடையாமல் ரத்த நாளங்களில் படிந்து, ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். கலப்படம் கலந்த உணவுகளைஉட்கொண்டால், நிச்சயம் உடல் உபாதைகள் ஏற்படும். இதை தடுக்க, தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக உணவு பாதுகாப்புத்துறை கூடுதல் ஆணையர் தேவபார்த்தசாரதி கூறும்போது, “தமிழகத்தில் இதுவரை விலங்குகொழுப்பு கலந்த நெய்களில்இனிப்புகள் தயாரிக்கப்பட்டதாக எந்த புகார்களும் பெறப்படவில்லை. வழக்கமான முறைகளில்தான் இனிப்புகள் தயாரிக்கப்படுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. விலங்கு கொழுப்புகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE