ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளை ஏன் பின்பற்றவில்லை? - போலீஸாருக்கு ஐகோர்ட் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளை ஏன்பின்பற்றவில்லை என போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு அக்.6-ம் தேதி மாநிலம் முழுவதும் 58 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மற்றும்திண்டுக்கல் மாவட்ட போலீஸாரிடம் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி செப்.9 மற்றும் 14-ம் தேதிகளில் அளிக்கப்பட்ட மனுவை பரிசீலிக்கக் கோரி திருப்பூர் ஆர்எஸ்எஸ் செயலாளர் ஜோதி பிரகாஷ், திண்டுக்கல் ஆர்எஸ்எஸ் இணை செயலாளர் சேதுராஜ் ஆகியோர் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், வழக்கறிஞர் ரபு மனோகர் ஆகியோர் ஆஜராகி, ‘‘ஆர்எஸ்எஸ் ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கும் வகையில் ஏற்கெனவே விதிமுறைகளை வகுத்து உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவுகளை தமிழக போலீஸார் மதிப்பது இல்லை. எனவே கடந்தாண்டு போல தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டனர்.

அதையடுத்து நீதிபதி, ‘‘ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு உச்ச நீதிமன்றம் தெளிவான விதிமுறைகளை வகுத்து உத்தரவிட்டுள்ள போதும் அதை ஏன் போலீஸார் பின்பற்றவில்லை’’ என கேள்வி எழுப்பினார். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE