பகுஜன் சமாஜ் நிர்வாகி மீது அவதூறு வழக்கு தொடர செல்வப்பெருந்தகை முடிவு: காங்கிரஸ் வழக்கறிஞர் அணி தலைவர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி மீது ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவதூறு வழக்கு தொடர இருப்பதாக காங்கிரஸ் வழக்கறிஞர் அணி தலைவர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் கே.ஜெய்சங்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பிய கடிதத்தில், ‘‘ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட், பிபிஜி சங்கர் ஆகியோரது கொலை தொடர்பான வழக்குகள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது உள்ளன.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அஸ்வத்தாமனுக்கு இளைஞர் காங்கிரஸில் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தது இவர்தான். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை என மக்கள் கேட்கின்றனர். அவரை கட்சியின்மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, செல்வப்பெருந்தகை குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பியதாக கூறி, பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி ஜெய்சங்கர் மீது, தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் கே.சந்திரமோகன், காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

செல்வப்பெருந்தகை மீது எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. முதல் தகவல் அறிக்கைகளில் எதிரியாகக்கூட காண்பிக்கப்படவில்லை. பழிவாங்கும் நோக்கத்தோடும், அரசியல் லாபம் அடையும் நோக்கத்தோடும், சட்ட விதிகளுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை ஜெய்சங்கர் முன்வைத்துள்ளார்.

நாகேந்திரன், அஸ்வத்தாமன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் செல்வப்பெருந்தகையால் உறுப்பி னர்களாகச் சேர்க்கப்படவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்அவர்களது தொடர்பு தெரிந்தவுடன், அஸ்வத்தாமனை காங்கிரஸ்கட்சியின் உறுப்பினர் பதவியில்இருந்து நீக்கியவர் செல்வப்பெருந்தகை.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பின்னணியில் ஆருத்ரா நிறுவனம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி ஏன் குரல் கொடுக்கவில்லை? எந்தத் தலைவர் தடுக்கிறார்? தனது நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என செல்வப்பெருந் தகை ஆன்லைனில் காவல் ஆணையருக்கு புகார் அளித்துள்ளார். மேலும் அவதூறு பரப்பும் வகையில் பொய் புகார் அளித்த ஜெய்சங்கர் மீது ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டுஅவதூறு வழக்கு தொடர உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE