ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையிடம் விசாரணை நடத்த பாஜக வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையிடமும் விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாஜகவினர் தெரிவித்திருப்பதாவது: தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா: ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. பாண்டியன் கொலை வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு கூறியதால்தான், அந்த வழக்கில் இருந்து செல்வப்பெருந்தகை காப்பாற்றப்பட்டார். எனவே, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கை மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும்.

ராகுல்காந்திக்கு கடிதம்... இந்நிலையில் தற்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கும் தொடர்பு இருப்பதாக ராகுல்காந்திக்கு எழுதிய கடிதத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். அஸ்வத்தாமனை இளைஞர் காங்கிரஸில் நியமித்தது செல்வப்பெருந்தகைதான்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மிகப்பெரிய குற்றப்பின்னணி கொண்டவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.எனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகை யிடமும் விசாரணை நடத்த வேண்டும்.

பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்: ஆம்ஸ்ட்ராங் கொலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீதும் சந்தேகம் இருப்பதாக பகுஜன்சமாஜ் கட்சியினர் தெரிவித்துள் ளனர். முதல்வர் ஸ்டாலின் உடனடியாக, தமிழக காவல்துறைக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கி பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரால், சந்தேகப்படுகின்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யிடம் போலீஸ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இதில் காவல்துறைக்கோ, அரசுக்கோ ஏதேனும் சங்கடங்கள் இருந்தால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE