“தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது” - கே.பாலகிருஷ்ணன் @ மதுரை

By என்.சன்னாசி

மதுரை: திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த பாஜக அரசு முயற்சிக்கிறது என சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான மறைந்த பி.ராமமூர்த்தியின் சட்டப்பேரவை உரைகள் நூல் வெளியீட்டு விழா, அவரது 2-வது ஆண்டு நினைவு சொற்பொழிவு மதுரை பைபாஸ் ரோட்லுள்ள மகால் ஒன்றில் நடந்தது. சு.வெங்கடேசன் எம்பி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் விஜயராஜன், பொன் னுத்தாய் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். சட்டமன்ற உரைகள் புத்தகத்தை பி.ராமமூர்த்தி நினைவு அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆர்.வைகை ஆர்.பொன்னி வெளியீட, மாநில செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன் சாமு வேல்ராஜ் பெற்றனர்.

முன்னதாக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளகளிடம் பேசியதாவது: ”மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்தது முதல் அனைத்து நிலைகளிலும் தோல்வியைத் தழுவுகிறது. நாடு முழுவதும் ஒருவித கொந்தளிப்பில் மக்கள் உள்ளனர். தனது தோல்வியை மறைக்கவும், மக்களை கொந்தளிப்பில் இருந்து திசை திருப்பவும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நாடகத்தை மத்திய அரசு அரங்கேற்றுகிறது. அரசியல் சாசனத்தில் உள்ளவற்றை மாற்ற வேண்டும் என்றால் மக்களவை மாநிலங்களவையில் பெரும்பான்மை இருக்க வேண்டும். பாஜக அரசுக்கே பெரும்பான்மை இல்லை. நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மாநில அரசுகளே இன்றி மத்தியில் அதிபர் ஆட்சிமுறையை அமல்படுத்தவே மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கையில் எடுத்துள்ளது. எப்போதும் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவே இருப்போம். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது என்ற லட்சியம் இருக்கும். எங்களை பொறுத்தவரை, கூட்டணி அரசில் பங்கேற்று சில அமைச்சர்களை பெறுவது என்பதில் உடன்பாடு கிடையாது. சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் குறைந்த பட்ச செயல்திட்டம், கொள்கை உடன்பாடு கொண்ட அரசு அமையுமானால் அதில் பங்கேற்போம். தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாகவே உள்ளது. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக அரசு முயற்சிக்கிறது” இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE