“சமூக, சாதி மோதலை ஊக்குவிக்கும் சித்தாந்தத்தை கைவிடுவது அவசியம்” - ஆளுநர் ஆர்.என்.ரவி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “கடந்த 10 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாதவர்கள் இங்கும் உள்ளனர். அரசியலமைப்பு அமைப்புகள் சமரசம் செய்யப்படுவதாக ஒரு தவறான கதையை உருவாக்குவதன் மூலம் பொதுமக்களின் அச்ச உணர்வை உருவாக்க முயற்சிக்கின்றனர்,” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் பாரத் சக்தி பாண்டி இலக்கியத்திருவிழா 2024-ஐ இன்று (செப்.20) தொடங்கி வைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது: “கடந்த பத்து ஆண்டுகளில் நாடு அடைந்த பொருளாதார முன்னேற்றத்தை ஒட்டுமொத்த உலகமும் அங்கீகரித்துள்ளது. நாம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சூழலில் உள்ளோம். உலகமே நம் நாட்டின் திறனை ஒப்புக் கொண்டுள்ளது. பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திலும் நாடு முன்னேறியுள்ளது.

இந்த சாதனைகள் அனைத்தும் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் பங்களிப்பால் சாத்தியமாகியுள்ளன. நாட்டின் தலைமை தடைகளை நீக்கி, மக்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார முன்னணியில் இந்தியா எழுச்சியடைந்துள்ளது. நம் நாடு ஆன்மிக விழிப்புணர்வையும் காண்கிறது. இது நாட்டின் முக்கிய பலமாகும். நாட்டின் தனித்துவமான ஆன்மிகக் கருத்தை அழிக்க கடந்த காலங்களில் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சுதந்திரத்துக்குப் பிந்தைய விவகாரங்களின் தலைமைக்கு வந்தவர்களும் பாரத சக்தியைக் குழிதோண்டிப் புதைக்க முயன்றனர். நாம் நமது தனித்துவமான ஆன்மீக வலிமையை மீட்டெடுக்கிறோம். இதற்கான தெய்வீக கடமை எங்களுக்கு உள்ளது.எவ்வாறாயினும், கடந்த 10 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாதவர்கள் இங்கும் உள்ளனர்.

அரசியலமைப்பு அமைப்புகள் (தேர்தல் ஆணையம், நிதி ஆணையம், தலைமை வழக்கறிஞர் என பல அமைப்புகள்) சமரசம் செய்யப்படுவதாக ஒரு தவறான கதையை உருவாக்குவதன் மூலம் பொதுமக்களின் அச்ச உணர்வை உருவாக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் எதிர்மறையான கற்பனையை உருவாக்குகிறார்கள். அவர்கள் பொதுமக்களின் நம்பிக்கையை குறைக்க முயற்சிக்கிறார்கள்.

மதச்சார்பின்மையின் ஐரோப்பிய வடிவத்தை நிராகரிக்க வேண்டியது அவசியமாகும். அனைவருக்கும் சமமான மரியாதை அளிக்கும் மதச்சார்பின்மையை நாம் ஊக்குவிக்க வேண்டும். சமூக மற்றும் சாதி மோதலை ஊக்குவிக்கும் அரசியல் சித்தாந்தத்தை கைவிடுவது அவசியம்,” என்றார். இந்நிகழ்வில் ஏ தர்மிக் சோஷியல் ஹிஸ்ட்ரி ஆப் இந்தியா, பஞ்சகோஷே பாத்வே ஆகிய நூல்களை வெளியிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE