திருப்பதி லட்டு சர்ச்சை: மக்களின் உணர்வுகள் பாதித்துள்ளதாக தமிழிசை வேதனை

By ஆர்.டி.சிவசங்கர்


கோத்தகிரி: “திருப்பதி போன்ற புனித ஸ்தலங்களில் கொடுக்கப்படும் பிரசாதங்களில் கலப்படம் செய்திருப்பது மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் அனைவரும் தூய்மையாக விரதம் இருந்து, சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பிரசாதத்தில் கலப்படம் செய்திருப்பது மக்களின் உணர்வுகளை பாதித்துள்ளது,” என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இன்று (செப்.20) நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கேர்பெட்டா, ஜக்கனாரை, சக்கத்தா ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து, பாரதிய ஜனதா கட்சியில் இணைய விரும்புவோருக்கு தொலைபேசி வாயிலாக உறுப்பினர் சேர்க்கையை செய்து கொடுத்து கட்சி அடையாள அட்டையை, தாமே பதிவிறக்கம் செய்து கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருப்பதி போன்ற புனித ஸ்தலங்களில் கொடுக்கப்படும் பிரசாதங்களில் கலப்படம் செய்திருப்பது மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் அனைவரும் தூய்மையாக விரதம் இருந்து, சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பிரசாதத்தில் கலப்படம் செய்திருப்பது மக்களின் உணர்வுகளை பாதித்துள்ளது. யாரெல்லாம் இக்குற்றத்தில் ஈடுபட்டிருந்தார்களோ அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் தகவலையும் கசிய விட்டு திமுக தொண்டர்களையும் தமிழக மக்களையும் தயார் செய்கிறார்கள். ஆனால், உதயநிதியை தயார் செய்வது தமிழக மக்களுக்கு நல்லதல்ல. அதுதான் வாரிசு அரசியல். திமுகவில் மிக மூத்த தலைவர்கள் எல்லாம் இருக்கும்போது அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

நடிகர் விஜய் முதலில் கட்சி தொடங்கட்டும். அக்டோபர் 27-ம் தேதி மாநாடு நடைபெறும் என அறிவித்திருக்கிறார். அதன்பிறகு அவர் தனது கொள்கையை சொல்கிறார். எத்தகைய கொள்கையை முன்னெடுத்துச் செல்கிறார் என கூறட்டும். தற்போது அவர் ஒரு சாயத்தை பூசிவிட்டார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. அதே நேரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அப்படி என்றால் திமுக செல்லும் பாதையில் செல்வதாக கூறுகிறார். அக்டோபர் 27-ம் தேதிக்கு பின்பு அவர் எத்தகைய பாதையை தேர்ந்தெடுக்கிறார் என பார்க்கலாம்.

மேலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவுக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். மக்கள் உறுப்பினர்களாக வரவேண்டும். ஏனென்றால் ஓர் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்துச் செல்லக்கூடிய கட்சியாக பாஜக மட்டும்தான் உள்ளது. மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்ற ஒரு தோற்றத்தை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டு மக்களுக்கானது மக்களுடைய வரி பணம் மிச்சமாகும். மக்களின் நேரம் மிச்சமாகும் மக்களின் சக்தி மிச்சமாகும். 2029-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படும்,” என்றார் தமிழிசை.

திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்: முன்னதாக, திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய் கலப்படமானது என்றும், அதில் பன்றிக் கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது 4 ஆய்வக பரிசோதனைகளிலும் உறுதியாகி இருப்பதாகவும் திருமலா திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி பெருமாள் கோயிலை நிர்வகிக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியமலா ராவ், “திருப்பதி பெருமாள் கோயிலுக்கு நெய் சப்ளை செய்பவர்கள் தரமான நெய்யை சப்ளை செய்கிறார்களா என்பதை பரிசோதிக்க கோயிலுக்குச் சொந்தமாக ஆய்வக வசதி இல்லை. வெளியே ஆய்வு செய்யலாம் என்றால், ஆய்வகக் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. நெய் சப்ளை செய்பவர்கள் இதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளில் விலங்கு கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான நான்கு அறிக்கைகளும் ஒரே மாதிரியான முடிவுகளைத் தந்தன. எனவே, நாங்கள் உடனடியாக விநியோகத்தை நிறுத்தினோம். மேலும், ஒப்பந்தக்காரரை பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளோம். அபராதம் விதிக்கும் நடைமுறையும் தொடங்கப்படும். அதோடு, ​​சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE