“திருப்பதி லட்டு மட்டுமல்ல... பல இனிப்புகளில் விலங்கு கொழுப்பு சேர்ப்பது வழக்கமே!” - திருமாவளவன்

By என்.சன்னாசி

மதுரை: திருப்பதி லட்டுவில் மட்டும் மாட்டுக் கொழுப்பு கலப்பது அல்ல. பெரும்பாலான இனிப்பு அல்லது உணவு பொருட்களில் விலங்கு கொழுப்பு பயன்படுத்துவது வழக்கம். உலகம் முழுவதிலும் நடை முறையில் இருக்கும் ஒன்று தான். இதனை அரசியலாக்குவது ஏன் என்று தெரியவில்லை” என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மதுரை புதூர் பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி சுமார் 62 அடி கம்பத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியினர் ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் தொல். திருமாவளன் எம்பி இன்று பங்கேற்று கட்சியை கொடியை ஏற்றி கட்சியினர் மத்தியில் பேசினார். பின்னர் அவர் செய்திாளர்களிடம் கூறியதாவது: “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசிய அளவில் ஒரு சலசலப்பை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. இதுகுறித்த சட்டத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்கள் ஆதரவு தரவேண்டும்.

அதற்கு வாய்ப்பு குறைவு. ஒரே நாடு, ஒரே தேர்தல் கோட்பாடு என்பது அடுத்தடுத்த ஆண்டில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை திணிப்பதற்கான முயற்சி என்ற அச்சமும் உள்ளது.இதுதொடர்பாக முன்னாள் குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, இந்த முறையை கைவிட வேண்டும். நடைமுறைபடுத்த அனுமதிக்கூடாது என, விசிக சார்பில், மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை எதிர்க்கிறோம், ஒருமித்த கருத்துடைய அரசியல் சக்திகளோடும் இணைந்து எதிர்ப்பை பதிவு செய்வோம்.

திருப்பதி லட்டுவில் மட்டும் மாட்டுக் கொழுப்பு கலப்பது அல்ல. பெரும்பாலான இனிப்பு அல்லது உணவு பொருட்களில் விலங்கு கொழுப்பு பயன் படுத்துவது வழக்கம். உலகம் முழுவதிலும் நடை முறையில் இருக்கும் ஒன்று தான். இதனை அரசியலாக்குவது ஏன் என, தெரியவில்லை. அதில் விலங்கு கொழுப்பு மற்றும் மாட்டுக்கொழுப்பு இருக்கக்கூடாது என்றால் அதற்குரிய வழிகாட்டுதலை உருவாக்கி இதுபோன்ற நிலை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,” என்றார். ஆட்சியில் அதிகார பங்கு வரும் சட்டமன்ற தேர்தலில் கேட்கப்படுமா? என்ற கேள்விக்கு, “இதற்குப் போதிய அளவு விளக்கம் சொல்லிவிட்டோம்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE