திருப்பதி லட்டு சர்ச்சை - ‘ஆண்டவனின் தண்டனை நிச்சயம்’ என நயினார் நாகேந்திரன் கருத்து

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: “நாட்டைப் பற்றி கவலைப்படாதவர்கள் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து பேசி வருகிறார்கள். இந்தத் தேர்தல் முறையானது நாட்டுக்கு நல்லது. இதனால் நாட்டுக்கு தேர்தல் செலவு மிச்சம்” என பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், “திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டவனின் தண்டனை நிச்சயம் அவர்களுக்கு கிடைக்கும்” என்றார்.

கும்பகோணம் மடத்துத் தெருவில் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “பாஜக என்ன திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற முறையில் தமிழக காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் உள்ளனர். கடந்த 1999-ம் ஆண்டு முதல் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து பேசத் தொடங்கி விட்டனர். 1951, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் சேர்ந்து நடைபெற்றது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் வரை ஒன்றாகவே தேர்தல் நடத்த வேண்டும். 5 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில், 10 முறை இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக 40 நாட்கள் வீணாகிறது. மேலும் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி யாராக இருந்தாலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். அறியாத, புரியாத தலைவர்கள், நாட்டைப் பற்றி கவலைப் படாதவர்கள் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து பேசி வருகிறார்கள். இந்த தேர்தல் முறையானது நாட்டுக்கு நல்லது. இதனால் நாட்டுக்கு தேர்தல் செலவு மிச்சம். வேட்பாளருக்கு செலவு மிச்சம்.

மது ஒழிப்பு மாநாடு நடத்துவது வரவேற்கக் கூடிய விஷயம். மதுவை உற்பத்தி செய்பவர்களை அழைத்து வந்து மதுவை ஒழிப்பேன் என கூறினால், எப்படி மதுவை ஒழிக்க முடியும். இதில் என்ன நியாயம் இருக்கிறது. தமிழகத்தில் பாஜக 50 லட்சம் பேரை இதுவரை உறுப்பினர்களாகச் சேர்த்துள்ளது. இதில் செல்வப்பெருந்தகைக்கு என்ன வருத்தம் இருக்கிறது எனத் தெரியவில்லை.

திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டவனின் தண்டனை நிச்சயம் அவர்களுக்கு கிடைக்கும். மேலும், பாரபட்சமின்றி, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பாஜக கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்தார். அவருடன் மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் சதீஷ்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் சுரேஷ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் வேதா செல்வம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE