கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு 4 வாரத்தில் போதிய பேருந்து வசதிகள்: ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு போதிய பேருந்து வசதிகளை 4 வாரங்களில் செய்து கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக, பொருளாதார, வாழ்வாதார மேம்பாட்டுக்காக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. கல்வராயன் மலைப் பகுதிக்கு பேருந்து வசதிகளை செய்து கொடுப்பது குறித்து சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர்கள் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட நிர்வாக இயக்குநர்கள் காணொலியில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

அப்போது, சேலம் கோட்டத்தில் இருந்து கல்வராயன் மலைப்பகுதிக்கு 2 மினி பேருந்துகள், விழுப்புரம் கோட்டத்தில் இருந்து 10 பேருந்துகளும் இயக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி ஆஜராகி, “விழுப்புரம் கோட்டம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் போதுமானதாக இல்லை” என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் லாபத்தை கருத்தில் கொள்ளாமல் கூடுதலாக மினி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அப்பகுதி மக்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்தனர். மேலும், கல்வராயன் மலைப் பகுதிக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் செய்து கொடுக்க வேண்டுமென சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட நிர்வாக இயக்குநர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வரும் அக்.18-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

முன்னதாக, கல்வராயன் மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு போன்றவற்றை வழங்கி அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலர் நேரில் ஆஜராக நேரிடும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேற்று எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அப்பகுதியில் போதிய ஆசிரியர்களுடன் பள்ளிகளும், போதிய மருத்துவர்களுடன் ஆரம்ப சுகாதார நிலையமும் செயல்படுவது தொடர்பாகவும், சாலை வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பாகவும் தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதும் கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE