“திருப்பதிக்கு லட்டு பிரச்சினை என்றால் நாட்டுக்கு ஒரே தேர்தல் பிரச்சினை” - சீமான் கருத்து

By இ.ஜெகநாதன்


திருப்பத்தூர்: “திருப்பதிக்கு லட்டு பிரச்சினை என்றால் நாட்டுக்கு ஒரே தேர்தல் பிரச்சினை,” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.20) நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பை சேர்த்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். லட்டு சாப்பிட்டோர் உயிரோடு இருப்பதால், அதை நாட்டின் பொது பிரச்சினையாக கொண்டு செல்வது சரி அல்ல. திருப்பதிக்கு லட்டு பிரச்சினை என்றால் நாட்டுக்கு ஒரே தேர்தல் பிரச்சினை. மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்குவங்கம், பிஹாரில் 7 கட்டங்களாகவும் நடத்தினர். மக்களவை தேர்தல் நடத்துவதிலேயே பாகுபாடு இருக்கும்போது, ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது.

எந்த அடிப்படையில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு செய்த பிறகு தான் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உயர் ரக விடுதிகளில் மட்டும் மது விற்பனை செய்ய முடியும். தெருக்களில் மதுக்கடைகளை மூடுவோம். கள்ளுக் கடைகளை திறப்போம். மது விஷம் போன்றது. அதை விற்ற பணத்தில் மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்துவது நல்லதல்ல. நான், திருமாவளவன், அன்புமணி உள்ளிட்டோர் தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் என்கிறோம். ஆனால் இதுகுறித்து அரசு பதில் கூறவில்லை.

ஜனநாயக பாதுகாப்பு தான் எங்களது கொள்கை. கூட்டணி கிடையாது. அதிமுக, திமுக கொள்ளை அடிப்பதில் ஒரே கொள்கை கொண்ட கட்சிகள். காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களை தான் பாஜக செயல்படுத்துகிறது. நாங்கள் அரசியலில் வலிமை பெற சாதி, மதம், மது, பணம், திரைக் கவர்ச்சி இடையூறாக உள்ளது. தமிழரான விஜய் மாநாட்டுக்கு தமிழ் சொந்தங்களிடம் ஆதரவு கேட்பது நியாயமானது தான். தமிழகத்திலும் அரசியல் புரட்சி நடக்கும். 2026 தேர்தலில் எனது எண்ணத்தில் தோன்றும் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். மைக் சின்னம் கிடையாது.

தமிழகத்தை 2-ஆக பிரிக்க நினைப்பது தவறு. முதலில் அதிக தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசத்தை பாஜக 2-ஆக பிரிக்கட்டும். தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோயம்பத்தூர், மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் தலைநகரங்களை ஏற்படுத்தி அரசு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE