தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு தடை கோரி வழக்கு: மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கான கடைகள் ஒதுக்கீட்டுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பி்ல் அளிக்கப்பட்ட மனுவை இருவாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் அக்.31ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு தனி இடம் ஒதுக்கக்கோரி அளிக்கப்பட்ட மனுவை பரிசீலி்க்க உத்தரவிட வேண்டும், எனக் கோரி பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், ‘சென்னை பாரிமுனை பந்தர் தெரு, ஆண்டர்சன் தெரு, என்எஸ்சி போஸ் சாலை உள்ளிட்ட 7 இடங்களில் பட்டாசு கடைகளை நடத்தி வருபவர்களுக்கு தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு கடைகள் ஒதுக்கும்போது முன்னுரிமையுடன் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என கடந்த 2006ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் டெண்டர் மூலமாக கடைகளை ஒதுக்கி வருகிறது. இதில் தகுதியில்லாத பலரும் பங்கேற்று அவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படுவதால், ஏற்கெனவே பட்டாசு தொழிலை மேற்கொண்டு வரும் விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு தீவுத்திடலில் தனி இடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் அல்லது வேறு இடம் ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடம் மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை. எனவே, தங்களது மனுவை பரிசீலிக்கும் வரை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் ஒதுக்கீடு தொடர்பான டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, "இது தொடர்பாக மனுதாரர்கள் சங்கம் அளித்துள்ள மனுவை தமிழக அரசு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இரு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE