புதுச்சேரி சிறுமி வழக்கு கைதி தற்கொலை: நீதி கோரி மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: சிறுமி பாலியல் கொலை கைதி தற்கொலை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளதால் நீதி விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் உரிமை கூட்டமைப்பு கோரியுள்ளது. இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் தரப்பட்டுள்ளது.

மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறியதாவது: காலாப்பட்டு மத்திய சிறையில் சிறுமி கொலை வழக்கின் விசாரணை கைதி விவேகானந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நீதிமன்றக் காவலில் இருந்த கைதி சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு அரசும், சிறைத்துறையும் முழுப் பொறுப்பேற்க வேண்டும். சிறையில் பணியில் அலட்சியமாக இருந்த சிறைத் துறையினர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்கால் கிளைச் சிறையில் ஆயுள் தண்டனை கைதி பிரதீஷ் தற்கொலை செய்து கொண்டது குறித்து புகார் அளித்தும் இதுவரையில் அரசும், சிறைத் துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரி சிறைகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது ஏற்புடையதல்ல. இவை அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். கைதி விவேகானந்தன் தற்கொலை சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன்

அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்த வேண்டும். விவேகாந்தன் உயிரிழப்புக்கு அரசும், சிறைத்துறையும் பொறுப்பு என்பதால் அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கும் புகார் அனுப்பி உள்ளோம். இவ்வாறு சுகுமாரன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE