சென்னை - தி.மலை ரயில் பாதை உட்பட 3 கோரிக்கைகள்: ரயில்வே அமைச்சரிடம் தமிழக பாஜக மனு

By துரை விஜயராஜ்

சென்னை: சென்னை - திருவண்ணாமலை, விருத்தாச்சலம் - கும்பகோணம் ரயில் பாதை உட்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சரிடம் தமிழக பாஜக மனு அளித்துள்ளது.

டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை, தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார். அப்போது, 3 ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய அமைச்சரிடம் மனு அளித்தார்.

இது தொடர்பாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கூறியதாவது: 2014ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இந்தியாவின் தென்கோடியில் உள்ள புராதன தீவான ராமேசுவரத்தை இணைக்க ரயில் பாலம் அமைக்கப்பட்டது. அப்பாலம் பழமையானதால் 2022ல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ரூ.535 கோடி செலவில் புதிய பாலம் அமைத்துள்ளது. இந்த பாலத்தை வரும் அக்.2ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் கடலின் அழகையும், கப்பல்களையும் கண்டு ரசிக்கும் வகையில், பழைய பாலத்தில் சிறிய அளவிலான சுற்றுலா ரயிலை இயக்க வேண்டும். சென்னை - திருவண்ணாமலை நேரடி ரயில் பாதை அமைக்க மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது காட்பாடி, வேலூர் வழியாக இருக்கும் பாதையில் திருவண்ணாமலைக்கு ரயிலில் செல்ல 6 மணி நேரம் ஆகிறது. எனவே, சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் பாதை அமைக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கை நிறைவேறும் நிலையில் சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக நேரடியாக திருவண்ணாமலைக்கு இருப்புப் பாதை அமையும். பயண நேரம் 3 மணி நேரமாக குறையும். விருத்தாசலத்திலிருந்து கும்பகோணத்துக்கு ரயில் பாதை அமைத்து தர முயற்சி எடுக்குமாறு கும்பகோணம் அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பினர் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் இது தொடர்பான கோரிக்கை உள்ளிட்ட 3 கோரிக்கைகளையும் நிறைவேற்றக் கோரி மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளித்தோம். இவ்வாறு அஸ்வத்தாமன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE